பாலியல் வழக்கு - பாதிக்கப்பட்ட பெண் மீது குறை கூறிய அலகாபாத் உயர்நீதிமன்றம்!
அலகாபாத் உயர்நீதிமன்றம் அண்மையில் ஒரு பாலியல் வன்கொடுமை வழக்கில் பெண்ணின் மார்பகங்களை தொடுவதும், பேண்ட் நாடாவை அவிழ்ப்பது பாலியல் வன்கொடுமை மற்றும் பாலியல் வன்கொடுமை முயற்சிக்கு ஈடாகாது என்று தீர்ப்பு வழங்கியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பை வழங்கிய நீதிபதியை கண்டித்ததுடன் அந்த தீர்ப்பும் நிறுத்தி வைக்கப்பட்டது.
இந்த நிலையில் மீண்டும் ஒரு பாலியல் வழக்கில் பாதிக்கப்பட்ட பெண் மீது குறை கூறும் வகையில் அலகாபாத் உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின்படி, அவர் தனது மூன்று தோழிகளுடன் டெல்லியில் உள்ள ஒரு மதுகடைக்கு சென்று 3 மணிவரை அங்கேயே இருந்து, அதிகளவு மது அருந்தியுள்ளார். அப்போது குற்றம் சாட்டப்பட்ட நபர் தன்னுடன் வீட்டிற்கு வரச்சொல்லி வற்புறுத்தியுள்ளார். தேவையின் காரணமாக ஒப்புக்கொண்ட அப்பெண் அந்த நபருடன் தங்க ஒப்புக்கொண்டுள்ளார்.
குற்றம் சாட்டப்பட்டவர் அந்த பெண்ணை பயணத்தின்போது தகாத முறையில் தொட்டதாகவும், நொய்டாவில் உள்ள அவரது சொந்த வீட்டிற்கு அழைத்துச் செல்லாமல் குர்கானில் உள்ள அவரது உறவினரின் பிளாட்டுக்கு அழைத்துச் சென்றதாகவும் அப்பெண் குற்றம் சாட்டினார். மேலும் அங்கு வைத்து அவர் அந்த பெண்ணை இரண்டு முறை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டவர் ஜாமீன் கோரி அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் மனு அளித்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி சஞ்சய் குமார் சிங், “பாதிக்கப்பட்டவரின் குற்றச்சாட்டு உண்மை என்று ஏற்றுக்கொள்ளப்பட்டாலும், அவரே பிரச்சனையை வரவழைத்துக் கொண்டார். அந்த பெண்ணும் இதற்கு பொறுப்பேற்க வேண்டும். பெண்ணின் மருத்துவ பரிசோதனையில், கன்னி தன்மை இழந்திருப்பது மட்டும்தான் குறிப்பிடப்பட்டுள்ளது. பாலியல் வன்கொடுமை குறித்து மருத்துவர் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. எனவே பாதிக்கப்பட்ட ஒரு எம்.ஏ. மாணவியாக, தனது செயலின் ஒழுக்கத்தை உணர வேண்டும்” என்று கூறி குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஜாமின் வழங்கினார்.