பாலியல் குற்றச்சாட்டு | முன் ஜாமீன் கோரி மலையாள நடிகர் #Siddique உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு!
பாலியல் வன்கொடுமை புகாரில் தேடப்பட்டு வரும் மலையாள நடிகர் சித்திக்கின் முன்ஜாமின் மனுவை கேரள உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், அவர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.
மலையாள திரையுலகில் பெண்கள் பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்படுகிறார்களா? என்பது குறித்து ஆய்வு செய்ய நீதிபதி ஹேமா தலைமையிலான 3 பேர் கொண்ட குழுவை கேரள அரசு அமைத்தது. கடந்த 2019-ம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட இந்தக் குழுவின் அறிக்கையை மாநில அரசு வெளியிடாமல் இருந்தது. இதனைத் தொடர்ந்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் அறிக்கையின் அதிர்ச்சியூட்டும் விவரங்கள் கடந்த மாதம் 19-ம் தேதி வெளியாகி விவாதத்தை ஏற்படுத்தின.
கேரள திரையுலகை மட்டுமல்லாமல் அனைத்து தரப்பினரிடமும் இந்த அறிக்கை பெரிய சர்ச்சையைக் கிளப்பியது. இதன் தொடர்ச்சியாக நடிகை ரேவதி சம்பத் என்பவர் நடிகர் சித்திக் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம்சாட்டினார். இது பலரிடமும் அதிர்ச்சியை உண்டாக்கியதை தொடர்ந்து போலீசாரும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்தனர். இதன் பின்னர் மலையாள நடிகர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் பொறுப்பிலிருந்து நடிகர் சித்திக் ராஜிநாமா செய்தார்.
இதன் தொடர்ச்சியாக, நடிகர் சித்திக் கேரள உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் மனுவை தக்கல் செய்தார். இந்த சூழலில், அவரது முன் ஜாமீன் மனுவை கேரள உயர்நீதிமன்றம் நேற்று முன்தினம் (செப். 24) தள்ளுபடி செய்தது. மேலும், நடிகர் சித்திக் தேடப்படும் குற்றவாளியாக போலீசாரால் அறிவிக்கப்பட்டு, விமான நிலையங்களுக்கு லுக் அவுட் நோட்டீஸ் வழங்கப்பட்டன. இந்த நிலையில், தலைமறைவாக உள்ள சித்திக் முன்ஜாமீன் கோரி நேற்று (செப்.25) உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார்.