பாலியல் குற்றவாளிக்கு மன்னிப்பு வழங்கிய விவகாரம்: ஹங்கேரி அதிபர் ராஜினாமா!
ஹங்கேரி அதிபராக கடந்த 2022-ம் ஆண்டு முதல் கட்டலின் நோவாக் பதவி வகித்து வருகிறார். காப்பகத்தில் வசித்த குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட நபருக்கு, கட்டலின் நோவாக் தனது அதிகாரத்தை பயன்படுத்தி பொது மன்னிப்பு வழங்கினார்.
இது அந்நாட்டு மக்கள் இடையே கடும் அதிருப்தியை கிளப்பியது. இதனைத் தொடர்ந்து நாட்டு மக்கள் பலரும் அதிபருக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் கட்டலின் நோவாக் அதிபர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். மேலும் அவர் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது:
"அவர் அந்த குற்றத்தை செய்யவில்லை என்று நம்பியதாலும், கருணையின் அடிப்படையிலும் நான் அவருக்கு மன்னிப்பு வழங்கினேன். நான் தவறு செய்துள்ளேன். நான் யாரையேனும் துன்புறுத்தியிருந்தால், பாதிக்கப்பட்டவர்கள் பக்கம் நான் நிற்கவில்லை என நீங்கள் கருதியிருந்தாலும், நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்."
இவ்வாறு அவர் கூறினார்.