பாலியல் வழக்கு - ஆசாராம் பாபுவுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியது உச்சநீதிமன்றம்!
பாலியல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட ஆசாராம் பாபுவிற்கு உச்சநீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தை சேர்ந்தவர் ஆசாராம் பாபு. ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் உள்பட பல இடங்களில் ஆசிரமம் மற்றும் அறக்கட்டளைகள் உள்ளன.இந்நிலையில் ஆசிரமத்தில் சூரத்தை சேர்ந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக 2013ம் ஆண்டில் சாமியார் ஆசாராம் பாபு மீது வழக்கு தொடரப்பட்டது. 2001ம் ஆண்டு முதல் 2006ம் ஆண்டு வரை தன்னை ஆசாராம் பாபு பல முறை பாலியல் பலாத்காரம் செய்ததாக அந்த பெண் புகார் அளித்திருந்தார்.
இது தொடர்பான விசாரணை காந்திநகர் நீதிமன்றத்தில் கடந்த 10 ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. மேலும், சாமியாரின் மனைவி மற்றும் மகன் உட்பட 6 பேருக்கு எதிராக ஆதாரங்கள் இல்லை என நீதிமன்றம் அவர்களை விடுவித்து உத்தரவிட்டது.
இதற்கிடையே, ஆசாராம் பாபு தனது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும், வேகமாக மோசமடைந்து வருவதாகவும் கூறி உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்தார். மேலும், தனது உடல்நிலை தொடர்பான மருத்துவ அறிக்கைகளையும் சமர்ப்பித்திருந்தார். இந்தநிலையில் இது தொடர்பான அவரது மனு இன்று நீதிபதி எம்.எம். சுந்திரேஷ் மற்றும் நீதிபதி ராஜேஷ் பிண்டல் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள் ஆசாராம் பாபுவுக்கு மார்ச் 31ம் தேதி வரை இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. ஆசாராம் பாபு தனது சீடர்களை சந்திக்க நீதிமன்றம் தடை விதித்துள்ளது. மேலும், ஜாமீன் கால அவகாசம் முடிவடைவதற்கு முன் ஆசாராம் பாபுவின் உடல்நிலையை மறுமதிப்பீடு செய்யலாம் என்று கோர்ட்டு கூறியுள்ளது.