குடிநீரில் கழிவுநீர் கலப்பு | “2 பேர் உயிரிழந்ததற்கான காரணம் பிரேத பரிசோதனைக்கு பின் தெரியவரும்” - அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
பல்லாவரம் அருகே 2 பேர் உயிரிழந்ததற்கான காரணம், பிரேதப் பரிசோதனை அறிக்கைக்கு பிறகே தெரியவரும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
தாம்பரம் மாநகராட்சியில் குடிநீரில் கழிவு நீர் கலந்து வந்ததை குடித்ததால், உடல் நலம் பாதிக்கப்பட்டோர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 36 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் 18 பேர் தற்போது குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பல்லாவரம் தனியார் மருத்துவமனையில் 5 பேர் சிகிச்சையில் உள்ளனர். ராஜீவ் காந்தி மருத்துவமனையில் ஒருவர் மேல் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டுள்ளார். மற்றவர்கள் புறநோயாளியாக சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர்.
இந்நிலையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களை சந்தித்து நலம் விசாரித்தார். அவர், சிகிச்சை விவரங்கள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது;
“உள் நோயாளிகளை சந்தித்து பேசினேன். இந்த சம்பவத்தில் திருவேதி, மோகனரங்கன் ஆகிய இருவர் உயிரிழந்தனர். இருவரும் உயிரிழந்த நிலையில் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர். பிரேத பரிசோதனைக்கு பின் இறப்புக்கான காரணம் குறித்து தெரியவரும். இதற்கான காரணங்கள் குறித்து மாவட்ட ஆட்சியர் தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது. குடிநீர் மாதிரி பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. பரிசோதனை முடிவு வர 2 அல்லது 3 தினங்கள் ஆகும். 6 இடங்களில் தற்போது மருத்துவ முகாம்கள் நடந்து வருகிறது.
பாதிக்கப்பட்ட பகுதியில் மாநகராட்சி மூலம் வாகனங்களில் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி எதற்கெடுத்தாலும் பதற்றத்தை ஏற்படுத்துகிறார். பதற்றமான செய்திகளை பதிவிடுவதையும் வாடிக்கையாக கொண்டுள்ளார்” என தெரிவித்தார்.