கடுமையான போக்குவரத்து நெரிசல் - டிராஃபிக்கிலேயே மதிய உணவை முடித்துக் கொண்ட கார் ஓட்டுநரின் வீடியோ இணையத்தில் வைரல்!
கடுமையான போக்குவரத்து நெரிசலால் டிராஃபிக்கிலேயே மதிய உணவை முடித்துக் கொண்ட கார் ஓட்டுநரின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
டெல்லி , மும்பை, பெங்களூரு மற்றும் சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் மிக முக்கியமான பிரச்னையாக சொல்லப்படுவது கடுமையான போக்குவரத்து நெரிசல்தான். கிராமங்களில் இருந்து கல்வி மற்றும் வேலை வாய்ப்பை உள்ளிட்ட அடிப்படை தேவைகளுக்கு லட்சக்கணக்கான மக்கள் பெருநகரங்களுக்கு குடிபெயர்கின்றனர்.
என்னதான் பெருநகரங்களின் பொதுப் போக்குவரத்து செயல்பட்டாலும் பெரும்பாலான நபர்கள் தங்களது சொந்த வாகனமான கார் அல்லது பைக்கிலேதான் பயணிக்கின்றனர். கடந்த ஆண்டுகளை விட இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களின் விற்பனை பன்மடங்கு அதிகரித்துள்ளது. அவசரத் தேவைகளுக்காக உருவாக்கப்பட்ட வாகனங்கள் இன்று அடிப்படை தேவையாக மாறியுள்ளது.
தென் மாநிலங்களின் முக்கிய தொழில் மற்றும் தொழில்நுட்ப நகரங்களாக விளங்கும் சென்னை, ஹதராபாத் மற்றும் பெங்களூரு ஆகிய பெருநகரங்கள் அரசு மற்றும் பொதுமக்களுக்கு பெரும் தலைவலியாக அமைவது போக்குவரத்து நெரிசல்தான். விரிவாக்கப்பட்ட சாலைகள், மேம்பாலங்கள், ஒரு வழிப்பாதைகள் என அரசுகள் எத்தகைய புதிய முயற்சிகளை செய்தாலும் போக்குவரத்து நெரிசல் மட்டும் குறைந்தபாடில்லை.
குறிப்பாக Peak Hours என அழைக்கப்படும் காலை 8 முதல் 11 மணி வரை அதேபோல மாலை 4மணி முதல் 7மணி வரை என குறிப்பிட்ட நேரங்களில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை சமாளிக்க முடியாமல் திணறி வருகின்றனர். இதனால் பள்ளிக்கு செல்லும் குழந்தைகள், அலுவலகம் செல்லும் பணியாளர்கள் தாமதமாக செல்கின்றனர். அதேபோல நோயாளிகள் அல்லது விபத்தில் காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் ஆம்புலன்ஸ்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்குவதால் பெரும் விபரீதம் ஏற்பட வாய்ப்புள்ளது.
இந்த நிலையில் பெங்களூருவில் கடுமையான போக்குவரத்து நெரிசலால் 3மணிநேரத்திற்கு மேலாக முக்கிய சாலைகள் ஸ்தம்பித்துள்ளது. இதனை புரிந்து கொண்ட தனியார் கார் ஓட்டுநர் ஒருவர் எப்படியும் கார் நகரப் போவதில்லை . எனவே இந்த டிராஃபிக்கில் மதிய உணவை முடித்துவிடலாம் என சாப்பிட்டுவிட்டு அதனை வீடியோவாக பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
The state of traffic jam today in Bengaluru. The cab driver was having his lunch on the way!
This will be conveniently ignored by @siddaramaiah @DKShivakumar government. Because the problem of #Bengaluru doesn't affect their power! #BrandBengaluru
pic.twitter.com/TIxVq8JMiO— Citizens Movement, East Bengaluru (@east_bengaluru) July 10, 2024
பெங்களூரு அவுட்டர் ரிங்ரோட்டில் ஏற்பட்ட இந்த போக்குவரத்து நெரிசலால் பலர் தாமதமாக அலுவலகம் சென்றதாக புகைப்படங்களுடன் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். இது குறித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ள X பயனர் ஒருவர் தெரிவித்துள்ளதாவது..
“ இதுதான் பெங்களூரு போக்குவரத்து நெரிசல்களின் நிலை கார் ஓட்டுநர் ஒருவர் வழியிலேயே மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார். இதனை கர்நாடக அரசு பெரும் பிரச்னையாகவே பார்க்காது. ஏனெனில் பெங்களூரு பிரச்சனை அவர்களின் அதிகாரத்தை ஒருபோதும் பாதிக்காது” என பதிவிட்டுள்ளார்.