"அமெரிக்காவுக்கு கடும் பதிலடி கொடுக்கப்படும்" - வடகொரியா அதிபர் எச்சரிக்கை !
கொரிய தீபகற்ப பகுதியில் ஏவுகணை மற்றும் அணு ஆயுத சோதனை மூலம் வடகொரியா அவ்வப்போது பதற்றத்தை ஏற்படுத்துகிறது. எனவே அணு ஆயுத சோதனை நடத்துவதற்கு வடகொரியாவுக்கு ஐ.நா.சபை தடை விதித்துள்ளது. அதனை பொருட்படுத்தாமல் வடகொரியா அணு ஆயுத உற்பத்தியை அதிகரித்து வருகிறது.
இதனால் தங்களது பாதுகாப்பு கருதி தென்கொரியாவும், ஜப்பானும் அமெரிக்காவுடன் இணைந்து கூட்டுப்போர் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றது. ஆனால், இந்த கூட்டுப்போர் பயிற்சியை தங்களுக்கு எதிரான போர் ஒத்திகையாக வடகொரியா கருதுகிறது. எனினும் தென்கொரிய தொடர்ந்து கூட்டுப்போர் பயிற்சியை மேற்கொன்டு வருகிறது.
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், வடகொரியா நேற்று ஏவுகணை சோதனையை நடத்தியது. இது சுமார் 1,500 கிலோ மீட்டர் தொலைவு பாய்ந்து இலக்குகளை தாக்கியது. இதனை தொடர்ந்து அமெரிக்காவுக்கு கடுமையான பதிலடி கொடுக்கப்படும் எனவும் வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதனால் கொரிய தீபகற்ப பகுதியில் பதற்றமான சூழல் நிலவுகிறது.