வடமாநிலங்களில் கடுமையான வெப்ப அலை - உயிரிழப்பு எண்ணிக்கை 87ஆக உயர்வு!
வட மாநிலங்களில் கடுமையான வெப்ப அலையால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோர் எண்ணிக்கை 87 ஆக உயர்ந்துள்ளது.
டெல்லி, ராஜஸ்தான், பீகார் போன்ற வடமாநிலங்களில் வெயிலின் தாக்கத்தால் உயிரிழப்புகள் அதிகரித்து வருகிறது. மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத அளவுக்கு வெப்ப அலை வீசுகிறது. இந்நிலையில் வெப்ப அலை மற்றும் குளிர் அலைகளை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என ராஜஸ்தான் உயர்நீதிமன்றமே அறிவித்தது.
வட மாநிலங்களில் கடுமையான வெப்ப அலையால் பாதிக்கப்பட்டு இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 87 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 36 மணி நேரத்தில் மட்டும் 45 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேற்கு ஒடிஸாவில் 19 பேரும், உத்தரப் பிரதேசத்தில் 16 பேரும், பீகாரில் 5 பேரும், ராஜஸ்தானில் 4 பேரும், பஞ்சாபில் ஒருவரும் வெப்ப அலையால் உயிரிழந்துள்ளனர்.
ஹரியாணா, சண்டீகர், டெல்லி, உத்தரப் பிரதேசத்தின் பல பகுதிகளிலும் மத்தியப் பிரதேசம், பஞ்சாப், ராஜஸ்தானின் சில பகுதிகளிலும், உத்தராகண்டின் சில பகுதிகளிலும் கடுமையான வெப்ப அலை நிலவுவதாக, இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதேபோல பீகார், தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் வெப்ப அலை காரணமாக பள்ளிக்குழந்தைகள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதால் பள்ளிகளுக்கு ஜுன் 10ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.