கடந்த 10 மாதங்களில் இல்லாத அளவுக்கு சரிந்த சேவைகள் துறை!
கடந்த செப்டம்பர் மாதத்தில் இந்தியாவின் சேவைகள் துறை வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.
இதுகுறித்து சந்தை ஆய்வு நிறுவனமான 'ஹெச்எஸ்பிசி இந்தியா சர்வீசஸ்' வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
சேவைகள் துறையில் தொழில் நடவடிக்கைகளுக்கான குறியீட்டு எண்ணான பிஎம்ஐ, கடந்த 2023 செப்டம்பர் மாதத்தில் 61-ஆக இருந்தது. ஆனால், அக்டோபரில் அது 58.4-ஆகவும், நவம்பரில் 12 மாதங்கள் காணாத குறைந்தபட்ச அளவாக 56.9-ஆகவும் குறைந்தது. பின்னர் டிசம்பரில் 59-ஆக அதிகரித்த பிஎம்ஐ, ஜனவரியில் 6 மாத உச்சமாக 61.8-ஆக அதிகரித்தது. பின்னர் பிப்ரவரி மாதத்தில் அது 60.6- ஆக சரிந்தது. எனினும் மார்ச் மாதத்தில் அது 13.5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 61.2-ஆக அதிகரித்து, பின்னர் ஏப்ரல் மாதத்தில் 60.8-ஆகவும், மே மாதத்தில் 60.2-ஆகவும் குறைந்தது.
அதனைத் தொடர்ந்து ஜூன் மாதத்தில் 60.5-ஆக மீட்சி பெற்ற பிஎம்ஐ, ஜூலையில் மீண்டும் 60.3-ஆகக் குறைந்தது. ஆகஸ்ட் மாதத்தில் அது மீண்டும் 60.9-ஆக உயர்ந்தது. இந்த நிலையில், சேவைகள் துறைக்கான பிஎம்ஐ கடந்த செப்டம்பர் மாதத்தில் 57.7-ஆகப் பதிவானது. இது சேவைகள் துறையில் கடந்த பத்து மாதங்கள் காணாத வீழ்ச்சி ஆகும். மதிப்பீட்டு மாதத்தில் சேவைகள் துறையில் புதிய தொழில்வாய்ப்புகள் குறைந்தன. மேலும், இந்திய சேவைகளுக்கான தேவையும் அதிக விரிவாக்கம் பெறவில்லை.
இந்தக் காரணங்களால் பிஎம்ஐ கடந்த செப்டம்பர் மாதத்தில் சரிவைக் கண்டுள்ளது. இத்துடன், தொடர்ந்து 38-ஆவது மாதமாக பிஎம்ஐ குறியீட்டு எண் நடுநிலை வரம்பான 50-க்கும் மேலே உள்ளது. அந்தக் குறியீட்டு எண் 50-க்கும் மேல் இருப்பது சேவைகள் துறையின் ஆரோக்கியமான போக்கையும், 50-க்கும் குறைவாக இருப்பது பின்னடைவையும் குறிக்கிறது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.