தொடர் தோல்வியால் கிரிக்கெட் வாரியம் கலைப்பு - இலங்கை விளையாட்டுத் துறை அதிரடி உத்தரவு!
உலகக் கோப்பை தொடரில் தொடர் தோல்வியை அடுத்து இலங்கை அணியின் கிரிக்கெட் வாரியம் அதிரடியாக கலைக்கப்பட்டுள்ளது.
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டிகளில் தொடர் தோல்விகளை இலங்கை அணி சந்தித்து வருவதால இலங்கை கிரிக்கெட் வாரியத்தை அதிரடியாக கலைத்து அந்நாட்டின் விளையாட்டுத்துறை அமைச்சர் ரோஷன் ரணதுங்க உத்தரவிட்டுள்ளார்.
இலங்கை அணி இதுவரை 7 போட்டிகளில் விளையாடி 2 வெற்றி, 5 தோல்விகளுடன் புள்ளிப்பட்டியலில் 7-வது இடத்தில் உள்ளது. மேலும் இலங்கை அணி ஏற்கனவே அரையிறுதி வாய்ப்பிலிருந்து வெளியேறி விட்டது. இன்னும் 3 ஆட்டங்கள் எஞ்சியுள்ள நிலையில் முதல் ஆட்டம் இன்று டெல்லியில் நடக்கிறது. இப்போட்டியில் வங்கதேசம் அணியுடன் இலங்கை அணி மோதுகிறது. இந்த நிலையில்தான் இலங்கை கிரிக்கெட் வாரியத்தை கலைத்து அந்நாட்டின் விளையாட்டுத்துறை அமைச்சர் ரோஷன் ரணதுங்க உத்தரவிட்டுள்ளார்.
இந்தியாவுக்கு எதிராக 302 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி தோல்வி அடைந்ததை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இலங்கை கிரிக்கெட் வாரிய இடைக்கால தலைவராக அர்ஜூனா ரணதுங்க நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் இந்த இடைக்கால வாரியத்தில் 7 பேர் இடம் பெற்றுள்ளனர்.
இந்த குழுவில் ஓய்வு பெற்ற நீதிபதிகள் இமாம், ரோஹிணி, இராங்கனி பெரேரா, முன்னாள் அமைச்சர் அர்ஜுனா ரணதுங்க, சிவில் விமான போக்குவரத்து ஆணைய முன்னாள் தலைவர் உபில் தர்மதாஸ் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.
இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் செயலாளர் பொறுப்பில் இருந்து மோஹன் டிசில்வா கடந்த சனிக்கிழமை தனது பதவியை ராஜிநாமா செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.