For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

இலங்கை கடற்படையின் தொடர் அட்டூழியம்! முதலமைச்சர் மீண்டும் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு கடிதம்!

07:43 PM Jan 17, 2024 IST | Web Editor
இலங்கை கடற்படையின் தொடர் அட்டூழியம்  முதலமைச்சர் மீண்டும் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு கடிதம்
Advertisement

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவர்களையும் அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திட நடவடிக்கை எடுக்கக்கோரி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

Advertisement

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கருக்கு எழுதியுள்ள கடிதத்தில், இலங்கை கடற்படையினரால் தமிழ்நாடு மீனவர்களும் அவர்களது மீன்பிடிப் படகுகளும் தொடர்ந்து சிறைபிடிக்கப்படுவது குறித்து தனது ஆழ்ந்த வேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

நாகப்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து 13.01.2024 அன்று கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற 10 மீனவர்களையும், அவர்களின் விசைப்படகையும் இலங்கைக் கடற்படையினர் 15.01.2024 அன்று சிறைபிடித்தனர் என்றும், மற்றொரு சம்பவத்தில், ராமநாதபுரம், பாம்பன் பகுதியைச் சேர்ந்த 18 மீனவர்களையும், அவர்களது இரண்டு விசைப்படகுகளையும் 16.01.2024 அன்று இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துள்ளனர் என்றும் முதலமைச்சர் தனது கடிதத்தில் கவலைபடத் தெரிவித்துள்ளார்

கடந்த மூன்று நாட்களில் இலங்கை கடற்படையினர் தமிழ்நாடு மீனவர்களை அடுத்தடுத்து சிறைபிடித்துள்ளனர் என்று தெரிவித்துள்ள முதலமைச்சர், இத்தகைய கைது நடவடிக்கைகள் மீன்பிடி தொழிலை மட்டுமே தங்கள் வாழ்வாதாரமாக நம்பியுள்ள மீனவ சமூதாயத்தினரிடையே பாதுகாப்பற்ற சூழலை உருவாக்கியுள்ளது என்று தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

இலங்கை கடற்படையினரின் சிறைபிடிப்பு நடவடிக்கைகளில் எந்த தளர்வும் இருப்பதாகத் தெரியவில்லை என்று குறிப்பிட்டுள்ள  முதலமைச்சர், இத்தகைய தன்னிச்சையான கைது நடவடிக்கைகளை தடுத்திட இலங்கை அரசுக்கு வலியுறுத்திட வேண்டுமென்றும் இலங்கை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து படகுகளையும் விடுவிக்க தெளிவான காலக்கெடுவை நிர்ணயிக்க வேண்டுமென்றும் தனது கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்.

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட அனைத்து மீனவர்களையும். அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிக்க இலங்கை அரசுடன் இந்த விவகாரத்தை வலுவாக எடுத்துச் செல்ல வேண்டும் என்றும் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு  எழுதியுள்ள கடிதத்தில் முதலமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இவ்வாறு செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Advertisement