#Serbia | ரயில் நிலையத்தின் மேற்கூரை இடிந்து விபத்து - 13 பேர் பலி!
செர்பியாவின் சட் நகரின் ரயில் நிலையத்தின் மேற்கூரை இடிந்து விழுந்து 13 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
செர்பியா நாட்டின் நோவி சட் நகரில் ரயில் நிலையம் அமைந்துள்ளது. அந்த ரெயில் நிலையத்தில் பயணிகள் நேற்று (நவ.1) வழக்கம்போல ரயிலுக்காக காந்திருந்தனர். அப்போது திடீரென ரயில் நிலையத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் பலர் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர்.
இதையும் படியுங்கள் : #RainAlert | 19 மாவட்டங்களில் கொட்டப்போகும் மழை… எங்கெல்லாம் தெரியுமா?
உடனடியாக அருகில் இருந்தவர்கள் மீட்புக்குழுவினருக்கு தகவல் அளித்தனர். இதன்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்புக்குழுவினர் புல்டோசர் உதவியுடன் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் இறங்கினர். அதே நேரத்தில், வெளியில் ஆம்புலன்ஸ் உடன் மருத்துவக் குழுவினர் தயாராக இருந்தனர். இருப்பினும், இந்த விபத்தில் சிக்கி 13 பேர் உயிரிழந்தனர். மீட்புக் குழுவினர் இந்த விபத்தில் சிக்கிய பெண்கள் இருவரை மீட்டனர்.
இதில் அவர்கள் காயமடைந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிகிச்சை பெற்று வரும் இரு பெண்கள் கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் தெரிவித்துள்ளன. ரயில் நிலையத்தின் மேற்கூரை இடிந்து விழுந்து 13 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்து தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.