ஜாமீனில் விடுதலையானார் #SenthilBalaji !
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி 471 நாட்கள் சிறை வாசத்திற்கு பின் ஜாமீனில் விடுதலையானார்.
அதிமுக ஆட்சிக் காலத்தில் அமைச்சராக இருந்த போது போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி சட்ட விரோதமாக பணம் பெற்றதாக தொடரப்பட்ட வழக்கில் திமுக ஆட்சியில் மின்சாரத்துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி கடந்த 2023 ஆம் ஆண்டு ஜூன் 14ஆம் தேதி அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார். பின்னர் 471 நாட்களாக சிறையில் இருந்த செந்தில் பாலாஜிக்கு இன்று உச்ச நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.
இந்நிலையில், சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜியை ஜாமீனில் விடுவிப்பதற்கான நீதிமன்ற நடைமுறைகள் நடைபெற்றன. இதனால் அவர் எப்போது வேண்டுமானாலும் புழல் சிறையை விட்டு வெளிவரலாம் என்பதால் புழல் சிறை வாயிலில் செந்தில் பாலாஜி ஆதரவாளர்கள் குவிந்தனர்.
இதனிடையே செந்தில் பாலாஜி பிணை உத்தரவாதங்களை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன் பார்வையிட்டார். அப்போது புழல் சிறையில் இருந்து செந்தில் பாலாஜி காணொலி காட்சி வாயிலாக ஆஜர் ஆனார். ஜாமீன் குறித்து அமலாக்கத்துறையிடம் நீதிபதி கார்த்திகேயன் விளக்கம் கேட்டார். அதற்கு செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்குவது குறித்து ஆட்சேபனை இல்லை என அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனை அடுத்து, இரு நபர் ஜாமின் உத்தரவாதத்தை ஆய்வு செய்த நீதிபதி கார்த்திகேயன் பின்னர் அதனை ஏற்றுக் கொண்டார். பின்னர் இரவு 7 மணி அளவில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமினில் விடுதலை செய்யப்பட்டார்.
பின்னர் புழல் சிறையில் இருந்து முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி வெளியே வந்தார். அவரை உற்சாகமாக மலர் தூவி அவரது ஆதரவாளர்கள் அழைத்துச் சென்றனர். அப்போது திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் சுதர்சனம் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.