#SenthilBalajiCase | "செந்தில் பாலாஜி அமைச்சராக சட்டப்பூர்வ தடையில்லை" - வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ!
"செந்தில் பாலாஜி அமைச்சராக சட்டப்பூர்வ தடையில்லை" என திமுக எம்பியும் மூத்த வழக்கறிஞருமான என்.ஆர். இளங்கோ தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டின் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையில் தமிழ்நாடு அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி கடந்தாண்டு ஜூன் மாதம் கைது செய்யப்பட்டார். இவரது ஜாமீன் மனு தொடர்ந்து தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், இதுவரை 58 முறை நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், செந்தில் பாலாஜி தரப்பில் மீண்டும் உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு அளிக்கப்பட்ட நிலையில், அடிப்படை உரிமை கருதி ஜாமீன் வழங்கப்படுள்ளது. மேலும், மீண்டும் தமிழகத்தின் அமைச்சராக செந்தில் பாலாஜிக்கு எவ்வித தடையும் கட்டுப்பாடும் உச்சநீதிமன்றம் விதிக்கவில்லை என்று அவரது வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில், அடிப்படை உரிமைகளை கருத்தில் கொண்டு உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்கியுள்ளது; வாரந்தோறும் திங்கள் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் கையெழுத்திட நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது; செந்தில் பாலாஜி இன்று மாலை அல்லது நாளை காலை சிறையில் இருந்து வெளியே வருகிறார்; செந்தில் பாலாஜி அமைச்சராகப் பொறுப்பேற்க சட்டப்பூர்வமாக எந்த தடையும் இல்லை" என வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ தெரிவித்தார்.