செந்தில் பாலாஜி வழக்கு: 4 மாதங்களில் விசாரணையை முடிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான சட்டவிரோத பணபரிமாற்ற தடைச் சட்ட வழக்கின் விசாரணையை 4 மாதங்களில் முடிக்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சட்டவிரோத பணபரிமாற்ற தடைச் சட்ட வழக்கில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஆண்டு ஜூன் 14ம் தேதி கைது செய்யப்பட்டார். அவருக்கு எதிராக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், ஜாமீன் வழங்க மறுத்ததுடன், வழக்கை மூன்று மாதங்களில் விசாரித்து முடிக்க வேண்டும் என கடந்த பிப்ரவரி மாதம் உத்தரவிட்டிருந்தது.
சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை இன்னும் தொடங்காத நிலையில், விசாரணையை முடிக்க மேலும் 4 மாதம் அவகாசம் வழங்க உத்தரவிடக்கோரி முதன்மை அமர்வு நீதிமன்றம் சென்னை உயர் நீதிமன்ற பதிவாளருக்கு அனுப்பிய கடிதத்தின் அடிப்படையில் வழக்கு விசாரணை நீதிபதி ஜெயசந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது செந்தில் பாலாஜி தரப்பில், காலவரம்பு நிர்ணயித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்ட அடுத்த நாள் விசாரணை நீதிமன்றங்களுக்கு எந்த கால வரம்பும் நிர்ணயிக்க கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதை சுட்டி காட்டி வாதம் முன்வைக்கப்பட்டது.
இதனையடுத்து, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான சட்டவிரோத பணபரிமாற்ற தடைச் சட்ட வழக்கின் விசாரணையை 4 மாதங்களில் முடிக்க வேண்டும் என சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.