புதிய உச்சம் தொட்ட #StockMarkets!
இந்திய பங்குச் சந்தை குறியீட்டு எண்களான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி இன்று புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
கடந்த சில நாட்களாகவே பங்குச் சந்தை வணிகம் எழுச்சியுடனே காணப்படுகிறது. இந்த சூழலில், இந்திய பங்குச் சந்தை வர்த்தகம் இன்று புதிய உச்சத்தை தொட்டுள்ளது. இன்றைய வர்த்தக நேர முடிவில், மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் 666 புள்ளிகள் உயர்ந்து 85,836 ஆக உள்ளது. தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீட்டு எண் 211 புள்ளிகள் அதிகரித்து 26,216 ஆகவும் இருந்தது. சென்செக்ஸ் -ஸின் 45 ஆண்டு கால வரலாற்றில், 850 மடங்கு வளர்ச்சி அடைந்துள்ளதாக பங்குச் சந்தை முதலீட்டு ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இந்திய பங்குச் சந்தைகளில் அந்நிய நாட்டு முதலீட்டு நிறுவனங்கள் மற்றும் உள்நாட்டு முதலீட்டாளர்கள் கணிசமான அளவு முதலீடு செய்துள்ளனர். மேலும் அமெரிக்க, ஐரோப்பிய மற்றும் ஆசிய நாடுகளின் பங்குச் சந்தைகளில் காணப்படும் வர்த்தக செயல்பாடுகளின் தாக்கம் இந்திய பங்குச்சந்தைகளில் எதிரொலிக்கிறது. மறுபுறம் உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சி பற்றிய நம்பிக்கையான கணிப்புகள், இந்திய நிறுவனங்களின் செயல்பாடுகளில் சிறப்பான வளர்ச்சி உள்ளிட்ட காரணங்களால் இந்திய பங்குச்சந்தைகளில் இன்று அதிக எழுச்சியுடன் வர்த்தகம் நடைபெற்றது.