திருநெல்வேலியில் பரபரப்பு - மூதாட்டிகள் தீக்குளிக்க முயற்சி!
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு, இரண்டு மூதாட்டிகள் தங்களுக்குப் பட்டா வழங்கக் கோரி உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. காவல்துறை மற்றும் பொதுமக்கள் உடனடியாக அவர்களைத் தடுத்து, காப்பாற்றினர்.
தாழையூத்து அருகே உள்ள கீழத் தாழையூத்து கிராமத்தைச் சேர்ந்த மூதாட்டிகளான கருமேனி அம்மாள் (65) மற்றும் ஆறுமுகத்தம்மாள் (60) ஆகிய இருவரும்தான் இந்தத் துயரமான முயற்சியில் ஈடுபட்டனர்.
இந்த மூதாட்டிகள் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு சிறிய வீட்டில் வசித்து வருகின்றனர். அவர்கள் வசிக்கும் பகுதி ஆற்றுப்படுகை என்பதால், அவர்களது வீட்டை இடிக்கப் போவதாக வருவாய்த் துறை சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
அந்த நோட்டீஸில், 7 நாட்களுக்குள் வீட்டை காலி செய்ய வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த மூதாட்டிகள், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து கண்ணீர் மல்கத் தங்களது கோரிக்கையைத் தெரிவித்தனர். கணவர் இறந்த பிறகு, ஏழு குழந்தைகளுடன் அந்த வீட்டில் பல ஆண்டுகளாக வசித்து வருவதாகவும், தங்களுக்கு வேறு எங்கும் செல்ல இடமில்லை என்றும் அவர்கள் கூறினர்.
அதே கிராமத்தில் வசிக்கும் மற்றவர்களுக்குப் பட்டா வழங்கப்பட்டுள்ள நிலையில், தங்களுக்கு மட்டும் பட்டா வழங்காமல் புறக்கணிக்கப்பட்டதாகவும் அவர்கள் குற்றம்சாட்டினர். இந்தப் பிரச்னை குறித்துப் பலமுறை மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாததால், விரக்தியடைந்த அவர்கள் இந்த விபரீத முடிவை எடுத்ததாகத் தெரிவித்தனர்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள அலுவலர்கள் மூதாட்டிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களின் கோரிக்கைகளை விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்த பின்னர், நிலைமை கட்டுக்குள் வந்தது.