For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

தோழர் என்.சங்கரய்யா மறைவு - அரசியல் தலைவர்கள் இரங்கல்....

12:39 PM Nov 15, 2023 IST | Web Editor
தோழர் என் சங்கரய்யா மறைவு   அரசியல் தலைவர்கள் இரங்கல்
Advertisement

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் என்.சங்கரய்யா உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். அவரது மறைவுக்கு அரசியல்  கட்சிகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Advertisement

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் செய்தியில், சாதி,  வர்க்கம் அடக்குமுறை ஆதிக்கம் ஆகியவற்றுக்கு எதிராக வாழ்நாளெல்லாம் போராடிய போராளி சங்கரய்யாவை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தினர் மற்றும் பொதுவுடைமை இயக்கத் தோழர்கள்,  பல்வேறு அரசியல் இயக்கங்களைச் சேர்ந்த நண்பர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

அதிமுக பொதுச்செயலாளர்  எடப்பாடி பழனிசாமி

எதிர்க்கட்சித் தலைவரும்,  அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள இரங்கல் செய்தியில்,  நூற்றாண்டு கண்ட சுதந்திர போராட்ட வீரரும், இந்திய பொதுவுடைமை இயக்கத்தின் மூத்த தலைவருமான சங்கரய்யா காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன். தன் வாழ்நாளின் பெரும் பகுதியை மக்கள் சேவையிலும், பாட்டாளிகளின் மேம்பாட்டிற்காகவும் அர்ப்பணித்த வீரத் தியாகி சங்கரய்யாவின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன் என தெரிவித்துள்ளார்.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ

மதிமுக பொதுச் செயலாளரும், மாநிலங்களவை எம்பியுமான வைகோ வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:  இலட்சியப் போராளியான தோழர் என்.சங்கரய்யா அவர்களின் மறைவு நம் அனைவருக்கும் பேரிழப்பாகும்.  ஜனநாயகம் காக்கவும்,  மதச்சார்பின்மை மதநல்லிணக்கம் பேணவும், தொழிலாளர் உரிமைகளை வென்றெடுக்கவும் களத்தில் நிற்கும் அனைவருக்கும் நாடு முழுக்க உள்ள தோழர்களுக்கும் போராளித் தலைவர் என்.சங்கரய்யா அவர்களின் பிரிவு அளவு கடந்த துயரத்தை அளிக்கிறது.  அவரது பிரிவால் துயரம் அடைந்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தோழர்களுக்கும்,  சங்கரய்யா அவர்களின் குடும்பத்தினருக்கும் மறுமலர்ச்சி தி.மு.க. சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

காங்கிரஸ் மாநிலத் தலைவர் கே.எஸ் அழகிரி

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி: எளிமையான வாழ்க்கையை மேற்கொண்டு மக்களோடு மக்களாக தொண்டால் பொழுதளந்த தூய்மையான தலைவர். தமிழகத்தில் கம்யூனிஸ்ட் இயக்கம் வளர்வதற்கு தனது வாழ்நாளை அர்ப்பணித்தவர். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், கம்யூனிஸ்ட் இயக்க தோழர்களுக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

பாமக நிறுவனர் ராமதாஸ் 

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் விடுத்துள்ள இரங்கல் செய்தி வருமாறு:

தோழர் சங்கரய்யாவின் வாழ்க்கை வரலாறும், அரசியலில் அவர் கடைபிடித்த நேர்மையும், ஒழுக்கமும் இன்றைய தலைமுறையினர் தெரிந்து கொள்ளப்பட வேண்டியதாகும். அத்தகைய சிறப்பு மிக்க தலைவரின் மறைவு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு மட்டுமின்றி,  ஒட்டுமொத்த இடதுசாரி இயக்கங்களுக்கும் ஈடு செய்ய முடியாத இழப்பாகும். தோழர் சங்கரய்யா அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினர்,  நண்பர்கள், உறவினர்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

விசிக தலைவர் திருமாவளவன் எம்பி

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் விடுத்துள்ள இரங்கல் செய்தி:

தமிழகத்தின் மூத்த தலைவரும்,  முதுபெரும் தலைவருமான 'தகைசால் தமிழர்' சங்கரய்யாவின் மறைவு மிகுந்த துயரமளிக்கிறது.  அவரது மறைவு பொதுவுடைமை இயக்கங்களுக்கும் உழைக்கும் விளிம்புநிலை மக்களுக்கும் நேர்ந்த ஈடுசெய்ய இயலாத பேரிழப்பாகும்.

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை 

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி வருமாறு:  முதுபெரும் அரசியல் தலைவரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிறுவனர்களில் ஒருவருமான சங்கரய்யா அவர்கள் காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வருத்தமடைகிறேன்.  சங்கரய்யா அவர்களின் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கமல்ஹாசன், மநீம தலைவர்

மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன்  எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:  நூற்றாண்டு தாண்டிய தன் வாழ்வில்,  நினைவு தெரிந்த பருவம் முதல் ஒரு நாளையும், ஒரு நொடியையும் தனக்கென வாழாத் தகைமையைக் கைக்கொண்ட முதுபெரும் தலைவர் என்.சங்கரய்யா நம்மை நீங்கினார். அவரைப் பிரிந்ததில் வருந்துவது இடதுசாரி இயக்கங்கள் மாத்திரமல்ல, நாகரிக அரசியல் விரும்பும் அத்தனை இயக்கங்களும்தான்.

நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்ட இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது: தோழர் சங்கரய்யாவின் இழப்பென்பது தூய அரசியலை நேசித்து நிற்கும் எங்களைப் போன்ற பிள்ளைகளுக்கு ஏற்பட்ட பேரிழப்பாகும்.  ஈடுசெய்ய முடியாத இழப்பில் தவிக்கும் ஐயா சங்கரய்யா அவர்களின் மகனிடம் அலைபேசி மூலம் தொடர்புகொண்டு குடும்பத்தினருக்கு எனது ஆறுதலைத் தெரிவித்து,  துயரினைப் பகிர்ந்து கொண்டேன். ஐயா சங்கரய்யா அவர்களுக்கு எனது கண்ணீர் வணக்கம்! என குறிப்பிட்டுள்ளார்.

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்

அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,  சுதந்திர போராட்ட வீரரும்,  இடதுசாரி இயக்கத்தின் அடையாளமுமான தோழர் என்.சங்கரய்யா அவர்கள் மறைந்த செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், இடதுசாரி தோழர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார். 

மஜக பொதுச் செயலாளர் மு. தமிமுன் அன்சாரி

மஜகவின் பொதுச் செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான தமிமுன் அன்சாரி விடுத்துள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:  தமிழ்நாட்டின் வரலாற்றில் அழியாத குன்றாக உயர்ந்து நிற்கிறார்.  செம்படையினர் தங்களது கட்டளை தளபதியை இழந்துள்ளனர்.  நாடு  ஒரு விடுதலை போராளியை இழந்துள்ளது.  அவரை இழந்து துடிக்கும் மார்க்ஸிய கம்யூனிஸ்ட் கட்சி தோழர்களுக்கும்,  அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறோம்.

Tags :
Advertisement