”மூத்த தலைவர் நல்லகண்ணுவின் உடல்நிலை சீராக உள்ளது” - அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்!
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று நல்லக்கண்ணுவை நேரில் சந்தித்து உடல் நலம் குறித்து விசாரித்தார். பின் அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "ஆகஸ்ட் 22ம் தேதி, வீட்டில் கீழே விழுந்த காரணத்தால், சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தலையிலும், இடது கை விரலிலும் காயம் கண்டுபிடிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் CT SCAN அம்மருத்துவமனையிலேயே பரிசோதனையில் தலையில் உள்காயம் ஏதும் இல்லை என்று உறுதிசெய்யப்பட்டது.
பின்னர் 24ம் தேதி மாலை உணவு அருந்தும் போது உணவுக் குழாயில் புரையேறியதால், அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு, அதனால் மேல் சிகிச்சைக்காக, அன்று இரவு 10.30 மணி அளவில் இராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். Bronchoscopy மூலமாக சுவாசக் குழாயில் இருந்த உணவு துகள்கள் அகற்றப்பட்டது.
நேற்று 27ம் தேதி இரவு வாயில் Secretion தேங்கியதால் மீண்டும் அவருக்கு சுவாச பிரச்சனை ஏற்பட்டது. எனவே, உடனடியாக அவருக்கு செயற்கை சுவாசம் கொடுக்கப்பட்டு, மேலும் மருத்துவக் குழுவின் அறிவுரைப்படி, தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது அவர் தீவிர கண்காணிப்பில் உள்ளார். மேலும், உடல்நிலை சீராக உள்ளது. மேலும் கூடுதலாக மருத்துவர்கள் ஆலோசனைகளை பெறுவதற்கு அப்போலோ மருத்துவமனை மருத்துவர்கள் நல்லகண்ணு ஐயா அவர்களை இன்று பிற்பகல் 1.30 மணிக்கு பரிசோதிக்க உள்ளனர்.
101 வயதை கடந்தவர் நல்லகண்ணு அய்யா மிகப்பெரிய தலைவர். அவருக்கு இப்போது தேவையே, தேவையான சிகிச்சை அளிக்கும் நேரத்தில் தனிமை. அவரது உடல்நிலை அக்கறை கொண்டு நேரில் வந்து விசாரிப்பதை கைவிட வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்களுக்கு வேண்டுகோள் விடுப்பதாக” அவர் தெரிவித்துள்ளார்.