வினேஷ் போகத்திற்கு கிடைக்குமா நீதி? ஆஜராகிறார் நம்பர் 1 வழக்கறிஞர்!
வினேஷ் போகத் வெள்ளி பதக்கம் கோரிய வழக்கு இன்று விசாரணைக்கு வரும் நிலையில், வினேஷ் போகத் சார்பில் மூத்த வழக்கறிஞர் ஹரீஷ் சால்வே ஆஜராகிறார்.
33-வது ஒலிம்பிக் போட்டியில், நேற்று முன்தினம் (ஆக. 7) நடைபெற்ற மல்யுத்தப் போட்டியில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் களமிறங்கி, ஒரே நாளில் 3 போட்டிகளில் அடுத்தடுத்து வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இந்நிலையில், 50 கிலோ எடைப்பிரிவில் பங்கேற்ற வினேஷ் போட்டிக்குரிய எடையை விட 100 கிராம் அதிகம் இருப்பதால் அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதனால், அவர் பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழந்தார்.
அரையிறுதியில் வினேஷ் போகத்திடம் தோற்ற வீராங்கனை இறுதிப் போட்டியில் விளையாடுவார் என்று அறிவிக்கப்பட்டது. இந்த முடிவுக்கு எதிராக சர்வதேச விளையாட்டு நடுவர் நீதிமன்றத்தை நாடிய வினேஷ் போகத், அரையிறுதியில் வெற்றி பெற்றதால் வெள்ளிப் பதக்கம் கோரினார். இதனிடையே, என்னிடம் இனி போராட சக்தியில்லை என்று இந்திய வீராங்கனை வினேஷ் போகத், நேற்று காலை மல்யுத்தத்தில் இருந்து ஓய்வை அறிவித்தார்.
வினேஷ் போகத் வெள்ளி பதக்கம் கோரிய மனு, சர்வதேச விளையாட்டுக்கான நடுவர் மன்றத்தில் இன்று விசாரணைக்கு வரவுள்ளது. இதில், இந்திய ஒலிம்பிக் சங்கம் சார்பில், இந்திய முன்னாள் சோலிசிட்டர் ஜெனரலும், முன்னணி வழக்கறிஞரான ஹரீஷ் சால்வே ஆஜராக உள்ளார். இந்த விசாரணை இந்திய நேரப்படி, இன்று பகல் 1 மணிக்கு தொடங்குகிறது.