Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

மூத்த வழக்கறிஞர் ஃபாலி எஸ் நாரிமன் காலமானார்!

09:42 AM Feb 21, 2024 IST | Web Editor
Advertisement

மூத்த வழக்கறிஞர் ஃபாலி நாரிமன் காலமானார். அவருக்கு வயது 95. 

Advertisement

மூத்த வழக்கறிஞரும்,  பத்ம விபூஷன் விருது பெற்றவருமான ஃபாலி நாரிமன்,  இன்று காலை டெல்லியில் உள்ள அவரது வீட்டில் உடல்நலக்குறைவால் காலமானார்.  அவருக்கு வயது 95.  இவர் நாடாளுமன்ற நியமன உறுப்பினராகவும்,  இந்தியாவின் தலைசிறந்த அரசியல் சாசன வழக்கறிஞர்களில் ஒருவராகவும் அறியப்பட்டவர்.  இந்திய வழக்கறிஞர்கள் சங்கத் தலைவராக 19 ஆண்டுகள் இருந்தார். 70 ஆண்டுகளுக்கும் மேலாக வழக்கறிஞர் தொழிலில் ஈடுபட்ட ஃபாலி நாரிமன் 1972-ம் ஆண்டு மத்திய அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞராக நியமிக்கப்பட்டு இருந்தார்.

இவர் 1929ம் ஆண்டு ஜனவரி மாதம் 10ம் தேதி ரங்கூனில் பிறந்தார்.  இவரது ஆரம்ப கல்வியை ரங்கூனிலும்,  சிம்லாவிலும் கற்றார்.  இவர் மும்பை புனித சேவியர் கல்லூரியில் பொருளாதாரம் மற்றும் வரலாற்றில் இளங்கலை பட்டம் பெற்றார்.  1950ம் ஆண்டு மும்பை அரசு சட்டக் கல்லூரியில் சட்டம் படித்தார்.  வழக்கறிஞர்கள் தேர்வில் முதலிடம் பெற்றதற்காக தங்கப்பதக்கமும், பரிசும் பெற்றார்.

தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் சொத்து குவிப்பு வழக்கு விசாரணைக்கு வந்த போது இவரது வாதத் திறமையால் தான் அவருக்கு ஜாமீன் கிடைத்தது.  காவிரி நதிநீர் விவகாரத்தில் கர்நாடக அரசுக்கு ஆதரவாக இவர் வாதிட்டார்.  ஆனாலும் தமிழ்நாடு அரசுக்கு சாதகமாகவே தீர்ப்பு கிடைத்தது.  மத்திய அரசு இவருக்கு 1991-ல் பத்ம பூஷன் மற்றும் 2007-ல் பத்ம விபூஷன் ஆகிய விருதுகளை வழங்கி கௌரவித்துள்ளது.

1972 மே முதல் 1975 ஜூன் வரை கூடுதல் அட்டர்னி ஜெனரலாக பதவி வகித்தவர்,  அப்போது நெருக்கடி நிலையை இந்திய அரசு பிறப்பித்ததால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பதவியிலிருந்து விலகினார்.  1976ம் ஆண்டில் அரசியல் சட்ட 42 ம் திருத்தம் கொண்டு வரப்பட்டபோது அதனை எதிர்த்தார்.  அரசியல் துறைக்கும், நீதித்துறைக்கும் இடையே ஏற்படும் சிக்கல்களிலும்,  ஊழல் ஒழிப்பு,  நதிநீர் சிக்கல் போன்ற விஷயங்களிலும் தமது சட்ட ஆலோசனைகளை அரசுக்கு அவர் வழங்கியுள்ளார்.

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்துக்கான 370-வது சட்டப் பிரிவு நீக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை விமர்சித்து இவர் வெளியிட்ட கருத்து நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது .

பாலி எஸ் நாரிமனின் மகன் ரோகின்டன் பாலி நரிமன்,  உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருந்து ஓய்வு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
Eminentjurist Fali NarimanFali NarimanRIP Fali Nariman
Advertisement
Next Article