இணையத்தை ஆக்கிரமித்த மலையப்பன்! பேருந்தை ஓரமாக நிறுத்தி 20 மாணவர்களை காப்பாற்றிய ஓட்டுநர்!
திருப்பூரில் தனியார் பள்ளி பேருந்து ஓட்டுநர் வண்டி ஓட்டும் போது திடீரென ஏற்பட்ட நெஞ்சு வலியால் பேருந்தை ஓரமாக நிறுத்தி விட்டு உயிரிழந்தார். அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இணையத்தில் பல்வேறு தரப்பினரும் புகழ் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் அய்யனூர் அருகே தனியார் பள்ளி உள்ளது. இந்தப் பள்ளிக்கு சொந்தமான பேருந்தில் மாணவர்களை ஏற்றி கொண்டு ஓட்டுநர் மலையப்பன் என்பவர் நேற்று மாலை சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. அப்போது அவர் உடனடியாக பேருந்தை சாலையின் ஓரத்தில் பத்திரமாக நிறுத்தினார்.
இதில் அந்தப் பேருந்தில் பயணித்த 20 மாணவர்களும் பத்திரமாக காப்பாற்றப்பட்டனர். உடனடியாக ஓட்டுநர் மலையப்பன் காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைகாக கொண்டு செல்லப்பட்டர். ஆனால், ஓட்டுநர் மலையப்பன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்நிலையில், ஓட்டுநரின் இந்த செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படியுங்கள் : “அனைத்து மதத்தினரையும் இந்தியா சமமாக நடத்த வேண்டும்” – அமெரிக்கா கருத்து!
இந்நிலையில், அவரின் செயலை பாராட்டி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உயிரிழந்த மலையப்பனுக்கு இரங்கல் தெரிவித்ததோடு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து அவரது குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் நிதி உதவி செய்ய உத்தரவிட்டார்.
இதையடுத்து, தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின்படி இன்று, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், உயிரிழந்த மலையப்பன் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி, முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து அறிவிக்கப்பட்ட ரூ.5 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார்.
அப்போது திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ், திருப்பூர் திமுக தெற்கு மாவட்ட செயலாளர் இல.பத்மநாபன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.