காமராஜர், கக்கன், மூப்பனார் வகித்த தலைமை பொறுப்புக்கு வந்துள்ள செல்வப்பெருந்தகை...! அரசியலில் கடந்து வந்த பாதை...!
காமராஜர், கக்கன், மூப்பனார் என மிகப்பெரிய ஆளுமைகள் அலங்கரித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் பொறுப்புக்கு செல்வப்பெருந்தகை நியமிக்கப்பட்டுள்ளார். விளம்பர வெளிச்சத்தை அதிகம் விரும்பாத இந்த போராளி தலைவரை பற்றி பார்க்கலாம்.
சென்னை மாநகரத்திற்கு அருகில் உள்ள படப்பை – மணிமங்கலத்தில் விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். சட்டப்படிப்பை முடித்த பின் சென்னை உயர் நீதிமன்ற பார் கவுன்சிலில் உறுப்பினராக பதிவு செய்தார். விடுதலைப்போராட்ட வீரரும், பொதுவாழ்வில் சத்தமில்லாமல் செயல்பாடுகள் மூலம் பணியாற்றியவருமான இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர். நல்லக்கண்ணு வை ரோல் மாடலாக கொண்டு செயல்படுபவர் செல்வப்பெருந்தகை.
பின்னர் திருமாவளவனுக்கும், செல்வப்பெருந்தகைக்கும் இடையே கருத்து வேறுபாடு உண்டானது. அதனால் விடுதலை சிறுத்தைகள் கட்சியிலிருந்து விலகினார். பகுஜன் சமாஜ் கட்சியில் இணைந்து அக்கட்சியின் மாநில தலைவர் ஆனார்.
அதன் பிறகு அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவராக இருந்த ராகுல் காந்தியை சந்தித்து காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். கட்சியில் என்ன பதவி வேண்டும் என கேட்ட ராகுலிடம் காங்கிரஸ் கட்சியின் பட்டியலின பிரிவில் எனக்கு பதவி வழங்குங்கள் என கூறினார். அதைப் பெற்றுக்கொண்ட பிறகு சும்மா இருந்துவிடாமல், காங்கிரஸ் கட்சியை பலப்படுத்துவதில் தீவிரம் காட்டினார். 2011 ஆம் ஆண்டு தேர்தலில் செங்கம் தொகுதியிலும், 2016 ஆம் ஆண்டு தேர்தலில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியிலும் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார்.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் சட்டமன்றக் குழு தலைவராகவும் செல்வப்பெருந்தகை தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனை தொடர்ந்து தமிழக சட்டசபையின் பொதுக் கணக்குக் குழு தலைவராக முதல்வர் ஸ்டாலினால் நியமிக்கப்பட்டார். மேலும், தமிழ்நாடு அனைத்துக் கட்சி எஸ்.சி/எஸ் டி நலக்குழு உறுப்பினராகவும் நியமிக்கப்பட்டார் செல்வப்பெருந்தகை. அதோடு, காங்கிரஸ் கட்சிப்பணியிலும் தீவிரமாக பணியாற்றினார். ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையிலும் கலந்து கொண்டார்.
செல்வப்பெருந்தகைக்கு முன்பாக , தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக பட்டியலினத்திலிருந்து தியாக சீலர் கக்கன், விடுதலைப்போராட்ட வீராங்கனை மரகதம் சந்திரசேகர், அஞ்சாத ஆளுமை இளையபெருமாள் ஆகியோர் இருந்துள்ளனர்.
காங்கிரசில் வலிமையான தலைவராக இருந்த இளையபெருமாளுக்கு பிறகு பட்டியலினத்தவர் பலர், எம்எல்ஏ , எம்.பி. பதவிகளைப் பெற்றாலும் மாவட்ட அளவிலே நின்று விட்டனர். ஆனால் செல்வப்பெருந்தகையோ, அப்படி குடத்திலிட்ட விளக்காக இருக்காமல், குன்றிலிட்ட விளக்காக ஒளிர்ந்து வருபவர். இந்திய நாடும், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியும் ,ஒரு முக்கியமான காலகட்டத்தில் உள்ளது. அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக மல்லிகார்ஜூன் கார்கே சென்ற ஆண்டு தேர்வானார். பல மாநிலங்களில் , காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும், முக்கிய பொறுப்புகளிலும் மீண்டும் ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மையின மக்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். அவ்வகையில் செல்வபெருந்தகை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக நியமிக்கப்பட்டிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.