சென்னை தீவுத்திடலில் களைகட்டிய பட்டாசு விற்பனை!
தீபாவளிக்கு இன்னும் ஒரு நாளே உள்ள நிலையில் சென்னை தீவுத்திடலில் பட்டாசு விற்பனை களைகட்ட தொடங்கியுள்ளது.
சென்னை தீவுத்திடலில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு கடைகள் அமைப்பது
வழக்கம். அந்த வகையில் இந்த வருடமும் பட்டாசு கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. கடந்த வருடம் 40 பட்டாசு கடைகள் தீவுத்திடலில் இடம்பெற்றிருந்த நிலையில், தற்போது கூடுதலாக 15 கடைகள் அதிகரித்து மொத்தமாக 55 கடைகள் இடம்
பெற்றுள்ளன.
தீபாவளிக்கு இன்னும் ஒரு நாளே உள்ள நிலையில், சென்னை தீவுத்திடலில் பட்டாசுகள்
வாங்க பொதுமக்கள் கூட்டமானது அதிகரித்தபடி உள்ளது. கடந்த 2 நாட்களாக பட்டாசு விற்பனையானது மந்தமாக இருந்து வந்த நிலையில், தற்போது வியாபாரம் களைகட்ட தொடங்கியுள்ளது.
பட்டாசுகளை வாங்க தாம்பரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்பட
பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் குவிந்து வருகின்றனர். குறிப்பாக குழந்தைகளுக்கு பிடித்த மாதிரியான சிங்கம், புலி, சாக்லேட், விளையாட்டுப் பொருட்கள் போன்ற பல்வேறு வகையான பட்டாசுகள் அதிக அளவில் விற்பனையாகி வருகிறது.
பட்டாசு விற்பனையானது கடந்த ஒரு வாரங்களாக நடைபெற்று வரும் நிலையில், தற்போது
வரை அதிக அளவிலான விற்பனைகள் நடைபெறவில்லை என விற்பனையாளர்கள் கூறியுள்ளனர். மேலும் பட்டாசு விற்பனையானது நாளை முழுமையாக அதிகரிக்கும் எனவும் சனிக்கிழமையும் விற்பனை நடைபெறும் எனவும் விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.