இலங்கைக்கு கடத்தப்பட இருந்த ரூ.27 கோடி மதிப்புள்ள மெத்தபெட்டமைன் பறிமுதல்... இருவர் கைது!
சென்னையில் 27 கோடி ரூபாய் மதிப்புள்ள, 2.7 கிலோ மெத்தபெட்டமைன் போதைப்பொருளை மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் பறிமுதல் செய்துள்ளனர்.
சென்னை மூலக்கடை பேருந்து நிலையம் அருகே சிலர் உயர் ரக போதைப் பொருட்களை கடத்துவதாக மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு சென்னை மண்டல அதிகாரிகளுக்கு, உளவுத்துறையினர் தகவல் அளித்துள்ளனர். அதனடிப்படையில் அங்கு கண்காணிப்பில் ஈடுபட்ட அதிகாரிகள், சந்தேகத்திற்கிடமாக நின்றுக் கொண்டிருந்த விஜய்குமார் மற்றும் மணிவண்ணன் ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அப்போது, அவர்களிடம் போதைப்பொருள் இருந்தது தெரிய வந்து உள்ளது. இதனையடுத்து அவர்களிடம் இருந்து 1.8 கிலோ மெத்தபெட்டமைன் (ICE) போதைப் பொருளைப் பறிமுதல் செய்தனர்.
கன்னியாகுமரி அகதிகள் முகாமில் வசிக்கும் இலங்கைப் பிரஜையான விஜய்குமார், போதைப்பொருளை இலங்கைக்கு கடத்தும் நோக்கத்துடன், 1.8 கிலோ எடையுள்ள மெத்தபெட்டமைனைக் கைப்பற்றுவதற்காக சென்னைக்குச் சென்றதாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து அவர்களை விசாரித்ததில், மணிவண்ணன் வீட்டிலும் போதைப்பொருள் பதிக்கி வைத்திருப்பது தெரியவந்தது. இதனையடுத்து மணிவண்ணனின் வீட்டிற்கு சென்று சோதனை மேற்கொண்டதில் மேலும் 900 கிராம் மெத்தபெட்டமைன் பறிமுதல் செய்யப்பட்டது.
மொத்தம் 2.700 கிராம் மெத்தபெட்டமைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. மேலும் 15 லட்சம் ரூபாய் ரொக்கமும் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த போதைப்பொருளின் சர்வதேச மதிப்பு 27 கோடி ரூபாய் என கூறப்படுகிறது. மேலும் விசாரணையில், இவர்கள் மணிப்பூர் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து இத்தகைய போதைப் பொருட்களை கடத்தி வந்து, கடல் வழியாக இலங்கைக்கு கொண்டு சென்று, அங்கு விற்பனை செய்வது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.
இருவரும் தற்போது நீதிமன்றக் காவலில் உள்ளனர். இந்த போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பில் தொடர்புடயவர்களை அடையாளம் காண்பதற்கான விசாரணைகள் தொடர்கின்றன.