“சீமான் அரசியல் ஆதாயத்திற்காக பெரியார் குறித்து பேசி வருகிறார்” - அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்!
விருதுநகரில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மொழிப்போர் தியாகிகளின் திருஉருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்,
“கட்சி நிர்வாகிகளை தயார்படுத்த நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. ஆளும் திமுக ஆட்சி மக்கள் விரும்பாத ஆட்சி. இந்த ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர மக்கள் கோபமாக உள்ளனர். எடப்பாடி பழனிச்சாமியின் மீதுள்ள கோபத்தால் மக்கள் ஆட்சி மாற்றத்தை கொடுத்தார்கள். ஆனால் திமுக ஆட்சி மீதும் தற்போது கோபத்தில் உள்ளனர்.
அரசு ஊழியர்கள், மாற்றுத்திறனாளிகள் என அனைவரும் இந்த ஆட்சியின் மீது கோபத்தில் உள்ளனர். காவல் துறையை கட்டுப்பாட்டில் வைத்துள்ள முதலமைச்சர் காவல் துறையை ஏவல் துறையாக வைத்துள்ளார். வேங்கை வயல் விவகாரத்தில் கூட்டணி கட்சிகளே சிபிஐ வேண்டும் என கேட்கின்றனர். வேங்கை வயல் விவகாரத்தில் சாதி, மதம் பார்க்காமல் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும் . அதுதான் அமமுகவின் நிலைப்பாடு.
சீமான் ஏன் பெரியாரை பற்றி இப்படி பேசுகிறார் என தெரியவில்லை. பெரியார் குறித்து ஏற்கனவே சீமான் நல்ல விதமாக பேசியுள்ளார். இது போன்ற சீமானின் பேச்சு வேதனையாக உள்ளது. பெரியார் ஒரு சமூக நீதி போராளி - சமத்துவம் சமூக நீதி தீண்டாமை, பெண் உரிமை, மூட நம்பிக்கை என அனைத்தையும் அரசியல் லாபம் இல்லாமல் செயல்படுத்தியவர். அரசியல் ஆதாயத்திற்காக சீமான் பெரியார் குறித்து பேசி வருகிறார்.
பெரியார் குறித்து சீமானின் பேச்சு கண்டிக்கத்தக்கது. இதுபோன்று பேசுவதை சீமான் நிறுத்திக் கொள்ள வேண்டும். சீமானின் பெரியார் குறித்த பேச்சு தமிழகத்திற்கே தலைகுனிவு. துரோகித்திற்காக பெயர் பெற்ற எடப்பாடி பழனிசாமி தமிழகம் மட்டுமல்ல, இந்தியா முழுவதும் மக்களை சந்தித்து பிரசாரம் செய்யட்டும். திமுக இரட்டை வேடம் போடுகிறது.
தென் தமிழகத்தில் நடைபெற்று வரும் சமூக பிரச்னை உருவாவதை தடுக்க ஆட்சியாளர்கள் தடுக்கவில்லை. தமிழகத்தில் சாதிச் சண்டை உருவாக சதித்திட்டம் தீட்டப்படுவதாக அச்சம் உருவாகியுள்ளது. டங்ஸ்டன் விவகாரத்தில் முதலில் அமைதியாக இருந்த திமுக மக்கள் எதிர்ப்பை அடுத்து திமுக அதற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியது.
மத்திய அரசு மக்களின் மன நிலையை புரிந்து கொண்டு டங்ஸ்டன் திட்டத்தை கை விட்டுள்ளது. தமிழக பாஜகவின் முழு முயற்சியால் இந்த திட்டம் கை விடப்பட்டுள்ளது. டங்ஸ்டன் திட்டம் கைவிடப்பட்டதற்கு முழு காரணம் பாஜகவையே சாரும்”
இவ்வாறு தெரிவித்துள்ளார்.