"பண்பே இல்லாமல் சீமான் பேசி வருகிறார்" - அமைச்சர் கீதாஜீவன் குற்றச்சாட்டு!
ஒரு கட்சி தலைவர் என்பதற்கான பண்பே இல்லாமல் சீமான் பேசுவதாக அமைச்சர் கீதா ஜீவன் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பரப்புரையின் போது தமிழ்நாடு அரசு மற்றும் தமிழ்நாடு மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி குறித்து அவதூறு பரப்பியதாக நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் சாட்டை துரைமுருகன் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இதனையடுத்து சாட்டை துரைமுருகனை திருச்சி சைபர் கிரைம் போலீசார் நேற்று கைது செய்தனர். பின்னர் சாட்டை துரைமுருகன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, சாட்டை துரைமுருகனை 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் அனுப்ப நீதிபதி சுவாமிநாதன் மறுத்து சாட்டை துரைமுருகனை விடுவித்து உத்தரவிட்டார்.
முன்னதாக சாட்டை துரைமுருகன் கைதுக்கு கண்டனம் தெரிவித்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், “கொலைகாரர்கள், கள்ளச்சாராய ஆலை அதிபர்கள் மீது எல்லாம் பாயாத வழக்கு, சட்டம், பேசியதற்காக துரைமுருகனை கைது செய்வதா? எதற்காக சாட்டை துரைமுருகனை கைது செய்தார்கள்? முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியை எங்கே அவர் அவதூறாக பேசினார்?” என்று கூறினார்.
இதையும் படியுங்கள் : அயோத்தி கோயிலுக்கு அழைத்து செல்வதாகக் கூறி போலி விமான டிக்கெட்: 100 பேரிடம் நூதன மோசடி!
இந்நிலையில், தமிழ்நாடு சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
“நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் 5-முறை முதலமைச்சராக இருந்த கருணாநிதியை அவதூறாக பேசியதை வன்மையாக கண்டிக்கின்றோம். தமிழ் வளர்ச்சி உட்பட மகளிர் வாழ்வாதாரம், திருநங்கைகள் வாழ்வாதாரம் என பல்வேறு வளர்ச்சிகளுக்காக பாடுபட்டவர் கருணாநிதி. ஒரு கட்சி தலைவர் என்பதற்கான பண்பே இல்லாமல் சீமான் பேசி வருகிறார். மாற்றி மாற்றிப் பேசும் சீமான் தனது மனநிலையைப் பரிசோதித்துக் கொள்வது நல்லது.இப்படி நடந்துகொள்வது தலைவன் என்ற பதவிக்கு தகுதி அல்ல.
தொடர்ந்து அவர் சட்டம் ஒழுங்கை கெடுக்கும் விதமாக பேசி வருகின்றார். தமிழ்நாடு முதலமைச்சர் பொறுப்பான முதலமைச்சராக இருப்பதால் சீமான் இவ்வளவு பேசியும்
தொண்டர்களை அமைதியாக இருக்க செய்து வருகின்றார். சீமான் கட்சிக்கு பணம் எங்கு இருந்து வருகின்றது என்பது எல்லோருக்கும் தெரியும். இலங்கையில் பணம் பெற்றுக் கொண்டு இங்கு அரசியல் நடத்துகின்றார்"
இவ்வாறு அவர் தெரிவித்தார்.