“#TVKVijay -ன் வருகை நாதக கூடாரத்தை காலி செய்துவிடுமோ என்ற அச்சம் சீமானுக்கு எழுந்துள்ளது!” - எம்பி மாணிக்கம் தாகூர்!
“விஜயின் அரசியல் வருகை தனது கட்சியின் கூடாரத்தை காலி செய்துவிடுமோ என்ற அச்சம் சீமானுக்கு ஏற்பட்டுள்ளது” என எம்பி மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.
சிவகாசியில் பல்வேறு வளர்ச்சித் திட்ட பணிகளை துவக்கி வைத்த விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது மாணிக்கம் தாகூர் பேசியதாவது:
தெலுங்கு பேசுபவர்கள் பற்றி நடிகை கஸ்தூரி விமர்சித்தது வன்மையாக கண்டிக்கத்தக்கது. அவரது பேச்சு ஏற்புடையது அல்ல. தமிழ்நாடு அனைத்து தரப்பினர்களையும், எல்லா மொழி பேசக்கூடியவர்களையும் அரவணைத்து செல்லக்கூடியது. ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தை உருவாக்கிக் கொண்டவர்கள் சொல்லக்கூடிய கருத்தை நடிகை கஸ்தூரி கூறியுள்ளார். பாஜகவின் அனுதாபியாகவும், அண்ணாமலையின் மிக மிக முக்கியமான நபராகவும் உள்ள நடிகை கஸ்தூரியின் பேச்சு, வெறுப்பு அரசியலின் மையமாகவே பார்க்கப்படுகிறது.
நடிகர் விஜய் வருகையால் சீமானுக்கு இழப்பு ஏற்படும் என்பது நேரடியாக தெரிந்துவிட்டதால், விஜய் குறித்து சீமான் விமர்சித்து வருகிறார். விஜயின் வருகை தனது கட்சியின் கூடாரத்தை காலி செய்துவிடுமோ என்ற அச்சம் சீமானுக்கு ஏற்பட்டுள்ளது. ஒருமுறை மட்டுமே வாக்களித்துவிட்டு, மறுமுறை வேறொரு அரசியல் கட்சிகளுக்கு வாக்களிப்பவர்களுக்காக பேசும் பேச்சாளராக சீமான் திகழ்கிறார்.
புதிதாக கட்சி ஆரம்பிப்பவர்கள் ஆளுகின்ற கட்சியை மட்டுமே விமர்சித்து, எதிர்ப்பு அரசியல் நடத்துவது வழக்கம். அதை விஜய் கையிலெடுத்துள்ள நிலையில், அதனை ஏற்றுக் கொள்வார்களா? இல்லையா? என்பதை மக்கள் தான் முடிவு செய்வார்கள். வயநாடு நாடாளுமன்ற இடைத்தேர்தலில் பிரியங்கா காந்தி 4- லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார். மோடி, அமித்ஷாவின் வெறுப்பு அரசியலுக்கு எதிரான மிகப்பெரிய சவாலான செயல்பாடுகள் நாடாளுமன்றத்தில் ஒலித்து, பெண்கள் சம்பந்தப்பட்ட உரிமைக்காக வலு சேர்க்கும்.
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் முக சாயலில் இருக்கும் பிரியங்கா காந்தி மீது எங்களுக்கு முழுமையான நம்பிக்கை இருக்கிறது. அவர் நாடாளுமன்றத்தில் ராகுல் காந்திக்கு மிகவும் பக்கப்பலமாக இருப்பார். திமுக கொள்கைக்கும், நடிகர் விஜய் புதிதாக தொடங்கியுள்ள கட்சிக் கொள்கைக்கும் வித்தியாசம் தெரியாமல் இருப்பது, ஆர்எஸ்எஸ் சித்தாந்தம் கொண்ட எச். ராஜாவின் அறியாமையை எடுத்துக்காட்டுகிறது.
தமிழுக்கும், தமிழர்களுக்கும் ஆதரவாக இருப்பவர்களையும், பேசுபவர்களையும் எதிர்ப்பது பாஜக. தமிழர்களுக்கு, தமிழுக்கு எதிரான கட்சி பாஜக. நாடு முழுவதும் இந்தியா கூட்டணி மிகவும் வலுவாக இருந்து, மதவாத சக்தியை எதிர்க்கும் களத்தில் இருக்கும் நிலையில், தமிழ்நாட்டில் திமுகவுடன் கலந்து பேசிதான் கூட்டணி அமைப்போம். திமுகவுடனான காங்கிரஸ் கூட்டணி சகோதரத்துவத்துடன் நீண்டகால உறவிலிருந்து வரும் பட்சத்தில், கூட்டணியில் விரிசலுக்கு இடமே இல்லை” என்றார்.