பஹல்காம் தாக்குதல் எதிரொலி - தமிழ்நாட்டில் பாதுகாப்பு ஒத்திகை!
ஜம்மு - காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் சுற்றுலாப் பயணிகள் 26 பேர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து பாகிஸ்தான் மீது இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இரு நாடுகளும் தங்கள் ராணுவ பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகரித்துள்ளன. இதனால் எல்லை பகுதிகளில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது.
பாகிஸ்தானுடன் போர்ப் பதற்றம் அதிகரித்துவரும் நிலையில், நாட்டில் வியூக ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த சுமார் 250க்கும் மேற்பட்ட இடங்களில் இன்று (மே 7) பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்று வருகிறது. அணுமின் நிலையங்கள், பெட்ரோலிய சுத்திகரிப்பு நிலையங்கள், ஆராய்ச்சி நிலையங்கள், ராணுவ தளங்கள்-முகாம்கள் என இந்த இடங்களில் வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டால், குடிமக்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளின் செயல்திறன் மற்றும் ஒருங்கிணைப்பை மதிப்பாய்வு செய்யும் நோக்கில் ஒத்திகை நடத்தப்படுகிறது.
அதன்படி, சென்னை துறைமுகம் மற்றும் கல்பாக்கம் அணுமின் நிலையம் ஆகிய இரண்டு இடங்களில் பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது. சிஐஎஸ்எஃப் பாதுகாப்புப் படை வீரர்கள், மாநில பேரிடர் மேலாண்மைக் குழு வீரர்கள் ஒத்திகையில் ஈடுபட்டனர். பொதுமக்களை எப்படி மீட்பது, மீட்டு மருத்துவமனையில் எப்படி அனுமதிப்பது குறித்து பயிற்சிகள் வழங்கப்பட்டது. மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற இந்த ஒத்திகையில் பாதுகாப்பு துறை, தீயணைப்புத் துறை உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.