அசாமில் குடியேறிய வங்கதேசத்தவர்களுக்கு குடியுரிமை வழங்கியது செல்லும் - உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
ஜனவரி 1966 இருந்து மார்ச் 1971 க்கு இடையே வங்கதேசத்தில் இருந்து இந்தியாவிற்கு குடியேறியவர்களுக்கு வழங்கப்பட்ட குடியுரிமை செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது. மொத்தம் 5 நீதிபதிகளில் ஒருவர் மட்டும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியுள்ளார். நீதிபதிகள் சூர்ய காந்த், எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகியோர் ஒரே மாதிரியாக தீர்ப்பு வழங்கிய நிலையில், நீதிபதி பர்திவாலா 6A பிரிவு அரசியல் சட்டத்திற்கு எதிரானது என்று மாறுபட்ட தீர்ப்பை வழங்கினார்.
“25 மார்ச் 1971க்கு முன்பு வங்கதேசத்தில் இருந்து அசாம் மாநிலத்துக்கு வந்தவர்களுக்கு குடியுரிமை வழங்க வழிவகுக்கும் பிரிவு 6A சரியானது. அந்த கட்ஆஃப் தேதியை வரையறுத்தது சரியானதே. பதிவு செய்வது என்பது இந்தியாவில் தானாகவே குடியுரிமை பெறமுடியும் என்ற நடைமுறை அல்ல. (registration is not the de-facto model to confer citizenship in india ).
பிரிவு 6A என்பது அரசியலமைப்பிற்கு முரணானது என்று கருத முடியாது. ஏனெனில் அது பதிவு செய்வதற்கான செயல்முறையை பரிந்துரைக்கவில்லை. எனவே பிரிவு 6A செல்லுபடியாகும்” என நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர்.
1985-ம் ஆண்டு செய்யப்பட்ட அசாம் ஒப்பந்தம், அதனை தொடர்ந்து கொண்டுவரப்பட்ட 6A சட்ட பிரிவு ஒரு அரசியல் தீர்வு என்று உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. அசாம் மாநிலம் உருவான பிறகு ஏற்பட்ட தனித்துவமான பிரச்னைகளுக்கு ஒரு அரசியல் தீர்வாக இந்த சட்ட பிரிவு அமைந்துள்ளது.
இந்த தீர்ப்பு மூலம், 1971ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை அசாமில் குடியேறிய வங்கதேசத்தவர்களுக்கு குடியுரிமை வழங்கியது செல்லும் என்று உச்சநீதிமன்ற தீர்ப்பு தெரிவித்துள்ளது.
ஒருவர் தங்கள் அண்டை வீட்டாராக யார் இருக்க வேண்டும் என்று தேர்ந்தெடுப்பதை அனுமதிக்க முடியாது. ஏனெனில் அது அரசியலமைப்பின் சகோதரத்துவ கொள்கைக்கு எதிரானது. வாழு, வாழ விடு என்பதே கொள்கையாகும். புலம்பெயர்ந்தவர்கள் இந்தியாவின் குடிமக்கள் ஆனவுடன் அவர்கள் இந்திய அரசியலமைப்பின் மூலம் ஆளப்பட்டனர், நம் நாட்டின் சட்டங்களுக்கு உட்பட்டவர்களாகின்றனர் என்றும் நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.
மேலும், இந்த சட்ட பிரிவுக்கு எதிராக சட்ட விரோதமாக குடியேறியவர்களை அடையாளம் கண்டு நாடு கடத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு, மாநில அரசு மேற்கொள்ள வேண்டும். இதனை உச்ச நீதிமன்றம் தொடர்ந்து கண்காணிக்கும் என்றும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.