2-வது டி20 தொடர்: 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி!
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டி20 தொடரில், இந்தியா 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில், இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது ஆட்டம் பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் நடைபெற்றது. இதில் இந்தியா ஆறு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இந்நிலையில், இரண்டாவது டி20 தொடர், நேற்று இந்தூரில் உள்ள ஹோல்கர் மைதானத்தில் நடைபெற்றது. இதில், இந்தியா டாஸ்க் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து ஆப்கன் அணியில் தொடக்க வீரர்களாக ரஹ்மானுல்லா குர்பாஸ், கேப்டன் இப்ராஹிம் ஸத்ரன் ஆகியோர் களமிறங்கினர்.
ரஹ்மானுல்லா தனது முதல் ஓவரிலேயே ஆட்டமிழந்து 14 ரன்களோடு வெளியேறினார். இதனைத் தொடர்ந்து, விளையாட வந்த குல்பதின் நயீப் அற்புதமாக விளையாடி 35 பந்துகளில் 57 ரன்களை குவித்தார். இதில் 5 பவுண்டரிகள், நான்கு சிக்ஸர்கள் அடங்கும். தொடர்ந்து கேப்டன் இப்ராஹிம் ஸத்ரன் 8 ரன்களில் வெளியேறினார். முகமது நபி 14 ரன்களும், நஜிபுல்லா ஸத்ரன் 23 ரன்களும் எடுத்து தோல்வியை தழுவினர்.
இந்திய தரப்பில் பௌலிங்கில் அர்ஷ்தீப் சிங் 3, ரவி பிஷ்னோய், அக்ஸர் படேல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். நஜிபுல்லா 23, கரீம் ஜனத 20, முஜீப் 21 ரன்களைச் சேர்த்தனர். 18- ஆவது ஓவரில் ஆப்கன் அணி 144 ரன்கள் எடுத்த நிலையில், கடைசி இரண்டு ஓவர்களில் 28 ரன்கள் பெற்று 20 ஓவர்களில் 172/10 ரன்களுக்கு ஆல் அவுட்டானது ஆப்கன்.
இதையடுத்து, 173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி தனது இன்னிங்ஸை தொடங்கியது. 173 ரன்கள் வெற்றி இலக்குடன் இந்திய அணி களம் கண்ட நிலையில், கேப்டன் ரோஹித் சர்மாவை கோல்டன் டக் அவுட்டாக்கினார். விராட் கோலி 16 பந்துகளில் 29 ரன்கள் விளாசினார். அதன்பின், யஷஸ்வி-ஷிவம் டுபே இணைந்து அதிரடியாக ஆடி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர்.
15.4 ஓவர்களிலேயே இந்திய அணி 173/4 ரன்களுடன் ஆப்கான் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதன் மூலம் 2-0 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றியது.