நாடாளுமன்ற தேர்தலின் இரண்டாம்கட்ட வாக்குப்பதிவு நிறைவு : மாநில வாரியாக பதிவாகியுள்ள வாக்குகள் நிலவரம்!
நாடாளுமன்ற தேர்தலில் இரண்டாம் கட்டமாக இன்று 12 மாநிலங்கள்,1 யூனியன் பிரதேசம் என மொத்தம் 88 தொகுதிகளுக்கு நடைபெற்ற வாக்குப்பதிவு நிறைவு பெற்றது.
உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது.543 தொகுதிகளுக்கு மொத்தம் 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில், முதற்கட்டமாக கடந்த 19-ம் தேதி தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த, 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. தமிழ்நாட்டை பொறுத்தவரையில் 70 சதவிகிதத்திற்கும் குறைவான வாக்குகளே பதிவாகின.
இந்நிலையில், இன்று (ஏப். 26) அசாம், பீகார், சத்தீஸ்கர், கர்நாடகா, கேரளா, மத்திய பிரதேசம் மகாராஷ்டிரா, மணிப்பூர், ராஜஸ்தான், திரிபுரா, உத்தரபிரதேசம், மேற்குவங்கம் மற்றும் ஜம்மு & காஷ்மீர் ஆகிய 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தைச் சேர்ந்த 88 தொகுதிகளில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணி அளவில் தொடங்கி நடைபெற்றது. அனைத்து பகுதிகளிலும் காலை முதலே பொதுமக்கள் ஆர்வத்துடன் வாக்குப்பதிவு மையங்களில் வரிசையில் காத்திருந்து தங்களது வாக்குகளை செலுத்தினர்.
இதையும் படியுங்கள் : “சதுப்பு நிலங்களை அடையாளம் காணும் பணியை ஜூன் மாதம் தொடங்க வேண்டும்” – தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!
கேரளாவில் உள்ள மொத்தம் 20 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாகவும், கர்நாடகாவில் உள்ள 28 தொகுதிகளில் 14 தொகுதிகளுக்கு இன்று முதல் கட்டமாகவும், ராஜஸ்தானில் மொத்தம் உள்ள 25 தொகுதிகளில் 13 தொகுதிகளுக்கு இரண்டாம் கட்டமாகவும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.
இதே போல் அசாமில் 5 தொகுதிகள், பீகாரில் 5 தொகுதிகள், சத்தீஸ்கரில் 3 தொகுதிகள், மத்திய பிரதேசத்தில் 6 தொகுதிகள், மகாராஷ்டிராவில் 8 தொகுதிகள், திரிபுராவில் 1 தொகுதி, உத்தர பிரதேசத்தில் 8 தொகுதிகள், மேற்கு வங்கத்தில் 3 தொகுதிகள், ஜம்மு காஷ்மீரில் ஒரு தொகுதியில் வாக்குப்பதிவு நடைபெற்றது.
இந்நிலையில், மாலை 5 மணி வாக்குப்பதிவு நிலவரம்
அசாம் - 70.66%
பீகார் - 53.03%
சத்தீஸ்கர் - 72.13%
ஜம்மு & காஷ்மீர் - 67.22%
கர்நாடகா - 63.90%
கேரளா - 63.97%
மத்தியப் பிரதேசம் - 54.58%
மகாராஷ்டிரா - 53.51%
மணிப்பூர் - 76.06%
ராஜஸ்தான் - 59.19%
திரிபுரா - 76.23%
உத்தரப் பிரதேசம் - 52.64%
மேற்கு வங்கம் - 71.84%
இறுதியாக 5 மணி நிலவரம் வெளியான நிலையில், மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைந்தது.