இரண்டாம் நிலைக் காவலர், தீயணைப்பாளர் பணிகளுக்கான தேர்வு - சென்னையில் மட்டும் 12,303 பேர் பங்கேற்பு!
இரண்டாம் நிலை காவலர், தீயணைப்பாளர் உள்ளிட்ட பணிகளுக்கான எழுத்து தேர்வு தமிழ்நாடு முழுவதும் 200-க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெறுகிறது.
இரண்டாம் நிலைக் காவலர், இரண்டாம் நிலை சிறைக் காவலர் மற்றும் தீயணைப்பாளர் ஆகிய பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் சமீபத்தில் வெளியிட்டது. இந்த பதவிகளுக்கான எழுத்துத்தேர்வு இன்று நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. 3,359 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்விற்கு 2.84 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.
இந்நிலையில், இன்று இந்த எழுத்துத் தேர்வானது தமிழ்நாடு முழுவதும் 200-க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெறுகிறது. குறிப்பாக சென்னையில் மட்டும் 10 மையங்களில் 12,303 பேர் தேர்வை எழுதுகின்றனர். இவர்களில் 2,435 பேர் பெண்கள் ஆவர். சென்னையில் தேர்வு நடைபெறும் மையங்களில் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணியில் 1500 போலீசார் ஈடுபட்டுள்ளனர். தேர்வறைக்குள் டிஜிட்டல் உபகரணங்களான செல்போன், ஸ்மார்ட் வாட்ச், கால்குலேட்டர், ப்ளூடூத் போன்றவற்றை பயன்படுத்தவும், எடுத்துச் செல்லவும் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த எழுத்து தேர்வானது காலை 10 மணிக்கு தொடங்கி 12.45 வரை நடைபெறும் என சீருடை பணியாளர் தேர்வாணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெறும் நபர்களுக்கு அடுத்தக்கட்டமாக உடற்தகுதி தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு உள்ளிட்டவைகள் நடைபெறும் எனவும் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளனர்.