பயணிகள் வசதிக்காக, சென்னை மாநகர பேருந்துகளில் அகற்றப்பட்ட இருக்கைகள்...!
கேளாம்பாக்கம் செல்லும் பயணிகள் வசதிக்காக சென்னை மாநகர பேருந்துகளில் முன் மற்றும் பின் படிக்கட்டுகளுக்கு அருகே உள்ள 2 இருக்கைகள் அகற்றப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் உள்ள மிகப்பெரிய பேருந்து நிலையமாக சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் இருந்தது. தமிழ்நாடு முழுவதும் இங்கிருந்து பேருந்துகள் இயக்கப்பட்டன. இதனால் சென்னையில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. அதிலும் குறிப்பாக பண்டிகை நாட்களில் சென்னை மாநகரம் கடும் வாகன நெரிசலில் சிக்கத் தவிக்கும். கோயம்பேட்டிலிருந்து தாம்பரம் செல்லவே சில மணி நேரம் ஆகிவிடும்.
இதனால், சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் ஏற்பட்டு வரும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், வண்டலூர் உயிரியல் பூங்காவை ஒட்டியுள்ள கிளாம்பாக்கத்தில் 88.52 ஏக்கர் பரப்பளவில் ரூ.397 கோடி மதிப்பில் புதிய பேருந்து நிலையம் அமைக்கும் பணி கடந்த 2018-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.
கோயம்பேடு போல் நெரிசல் ஏற்படாத வகையில், பேருந்துகளை எளிதாக நிறுத்தி, வெளியில் எடுத்து செல்லும் வகையிலும், பயணிகள் எளிதாக பயணம் செய்யும் வகையிலும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அதிநவீன வசதியுடன் அழகிய வடிவத்தில் கட்டப்பட்டிருக்கிறது. இந்த பேருந்து நிலையம் கடந்த டிசம்பர் 30ம் தேதி திறக்கப்பட்டது. கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து தென்மாவட்டத்துக்கும் மேற்கு மாவட்டத்திற்கும் செல்லும் அனைத்து அரசு விரைவு பஸ்களும் இயக்கப்படுகிறது.
மேலும், பயணிகளுக்கு பல்வேறு வசதிகளும் அரசு சார்பில் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில், கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திலிருந்து இயக்கப்படும் மாநகர பேருந்துகளில், பயணிகள் தங்களின் உடைமைகளை வைத்துக் கொள்ள வசதியாக, பேருந்தின் முன் மற்றும் பின் படிக்கட்டுகளுக்கு அருகே உள்ள 2 இருக்கைகள் அகற்றப்பட்டுள்ளன. இதனால் பயணிகள் சிரமமின்றி தங்களின் உடைமைகளை எடுத்துச் செல்கின்றனர்.