கும்மிடிப்பூண்டி அருகே மாமூல் தர மறுத்த இளைஞருக்கு அரிவாள் வெட்டு!
கும்மிடிப்பூண்டி அருகே மாமூல் தராததால், இளைஞரை 6 பேர் கொண்ட கும்பல் சராமாரியாக வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த ஏனாதிமேல்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ் (36). இவர் கன்னியம்மன் கோயில் மேம்பாலத்தின் கீழ் சில மாதங்களாக காய்கறி கடை நடத்தி வருகிறார். அவருக்கு உதவியாக காய்கறி கடையில் அதே கிராமத்தைச் சேர்ந்த இளவரசன் (22) பணியாற்றி வருகிறார். இந்நிலையில் காய்கறி கடைக்குள் புகுந்த வெட்டுக்காலனி பகுதியைச் சேர்ந்த 4 பேர் கடையில் கடன் கேட்டுள்ளனர். அதை இளவரசன் தர மறுத்துள்ளார். மேலும் மாமூல் கேட்டும் மிரட்டியதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து மாமூல் தர மறுத்த இளவரசனுக்கு, அந்த கும்பல் கொலை மிரட்டல் விடுத்து சென்றுள்ளது. இது சம்பந்தமாக கடை உரிமையாளர் ரவி கும்மிடிப்பூண்டி காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வெட்டுக்காலனி பகுதியைச் சேர்ந்த விஜி, பார்த்தா உள்ளிட்ட ஆறு பேர் கொண்ட கும்பல் திடீரென காய்கறி கடையில் நுழைந்து இளவரசனின் வயிறு, தலை, கை உள்ளிட்ட பகுதிகளில் பலமாக அரிவாளால் வெட்டியுள்ளனர்.
தகவலறிந்து விரைந்து வந்த கும்மிடிப்பூண்டி போலீசார் விஜி (22) என்பவரை மட்டும்
அதிரடியாக கைது செய்தனர். மேலும் தலைமறைவான பார்த்தா உள்ளிட்ட ஐந்து பேரை தேடி வருகின்றனர். வெட்டு காயம் அடைந்த இளவரசனுக்கு, கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனையில் முதல் உதவி சிகிச்சை அளித்த பின், மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். இதுதொடர்பாக கும்மிடிப்பூண்டி காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.