சுட்டெரிக்கும் வெயில் - குற்றாலத்தில் குவிந்த பொதுமக்கள்!
கடுமையான வெயிலின் தாக்கத்தால் குறைந்த அளவு கொட்டும் குற்றால அருவியில் வெப்பத்தை தணிக்க பொதுமக்கள் குவிந்து வருகின்றனர்.
கோடைக்காலம் ஆரம்பமான நிலையில் தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாகிக் கொண்டே போகிறது. தமிழ்நாட்டில் தற்போது வெயில் தாக்கம் அதிகமாக உள்ள காரணத்தால் நீர் நிலைகளிலும் நீரின் அளவு குறைந்துள்ளது. வெயிலின் தாக்கத்தால் அருவிகளும் வறண்டே காணப்படுகின்றன. இருப்பினும் வெப்பத்தின் தாக்கத்திலிருந்து விடுபட ஏராளமான பொதுமக்கள் குளிப்பதற்காக நீர் நிலைகளை நாடி சென்று வருகின்றனர்.
அந்த வகையில், கோடை வெயிலிலும் குறைந்த அளவு ஓரமாக கொட்டி வரும் குற்றால
அருவியில் குளிப்பதற்காக ஏராளமான சுற்றுலா பயணிகள் தற்போது வருகை தந்த வண்ணம் உள்ளனர். குறிப்பாக, இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதாலும், கடுமையான வெயிலின் தாக்கத்தின் காரணமாகவும், வெப்பத்திலிருந்து விடுபட இதமான காலநிலை நிலவும் இடங்களுக்கு பொதுமக்கள் சென்றுவரும் நிலையில், குற்றால அருவியில் ஓரமாக விழும் குறைந்த அளவு நீரில் ஆனந்த குளியலிடுவதற்காக பொதுமக்கள் வருகை தந்த வண்ணம் உள்ளனர்.
தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றால அருவியில் மக்கள் குவிந்து வருகின்றனர். மேலும், மற்ற சுற்றுலா தளங்களான மெயின் அருவி, பழைய குற்றாலம், புலி அருவி, ஐந்தருவி, சிற்றருவி என அனைத்து அருவிகளும் வறண்ட நிலையிலேயே உள்ளது.