#TNSchools | காலாண்டு விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் திறப்பு!
தமிழ்நாடு முழுவதும் காலாண்டு தேர்வு விடுமுறை முடிந்து பள்ளிகள் இன்று திறக்கப்படுகின்றன.
தமிழ்நாடு பள்ளிக்கல்வி பாடத் திட்டத்தில் அரசு, அரசு உதவி மற்றும் தனியார் பள்ளிகளில் 1 முதல் பிளஸ் 2 வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு நடப்பு கல்வி ஆண்டுக்கான காலாண்டு தேர்வுகள், முதல் பருவ தேர்வுகள் கடந்த செப்டம்பர் 19ம் தேதி தொடங்கி 27ம் தேதி முடிவடைந்தது. இதைத் தொடர்ந்து மாணவர்களுக்கு செப்டம்பர் 28ம் தேதி முதல் விடுமுறை விடப்பட்டது.
இந்நிலையில், விடுமுறை முடிந்து பள்ளிகள் மீண்டும் இன்று திறக்கப்படுகின்றன. இதையொட்டி, பள்ளி வளாகங்களில் தூய்மை பணிகள், இதர பராமரிப்பு பணிகள் செய்து முடிக்கப்பட்டுள்ளன.இதையடுத்து, மதிப்பீடு செய்யப்பட்ட காலாண்டு தேர்வு விடைத்தாள்களை முதல் நாளான இன்றேமாணவர்களுக்கு விநியோகம் செய்ய வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை துறை தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பள்ளிகல்வித் துறை தெரிவித்திருப்பதாவது :
"மதிப்பீடு செய்யப்பட்ட காலாண்டு தேர்வு விடைத்தாள்களை முதல் நாளான இன்றேமாணவர்களுக்கு விநியோகம் செய்ய வேண்டும். 2-ம் பருவத்துக்காக பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள பாட நூல்களையும் உடனே வழங்க வேண்டும். மேலும், பருவ மழை தொடங்கவுள்ளதை முன்னிட்டு பள்ளிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தலைமை ஆசிரியர்களுக்கு மின்னஞ்சல் மூலம் ஏற்கெனவே அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தற்போது பல மாவட்டங்களில் மழை பெய்து வருவதால் மாணவர்களின் நலன் கருதி அந்த நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டும்.
இதுதவிர மாணவர்கள் பங்கேற்கும் கலைத் திருவிழா போட்டிகளுக்கான நடைமுறைகள், மகிழ் முற்றம் திட்டத்தில் மாணவர் குழுக்களை ஏற்படுத்துதல் ஆகிய பணிகளையும் ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டுதல்களை பின்பற்றி செயல்பட வேண்டும்"
இவ்வாறு பள்ளிகல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.
இதையும் படியுங்கள் : Weatherupdate | தமிழ்நாட்டில் 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம் தகவல்!
இதையடுத்து, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் தொகுத்தறி மதிப்பெண்களை துறையின் செயலியில் பதிவேற்ற வேண்டும் என தொடக்கக்கல்வி இயக்குனரகம் அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில்,
"தமிழ்நாட்டில் இயங்கும் அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 2024-25 கல்வி ஆண்டுக்கான முதல் பருவ தொகுத்தறிவு தேர்வில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களை பள்ளி கல்வி துறையின் டிஎன்எஸ்இடி(TNSED) செயலியில் ஆசிரியர்கள் பதிவு செய்ய வேண்டும். விடைத்தாள்களை திருத்திய பின்னர் தொகுத்தறி மதிப்பெண்களை அக்டோபர் 9ம் தேதிக்குள் உள்ளீடு செய்வது அவசியம். இதற்கான வழிகாட்டுதல்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இந்த தகவலை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்பு வரை கற்பிக்கும் அனைத்து ஆசிரியர்களுக்கும் தெரியப்படுத்த வேண்டும். இது சார்ந்து அனைத்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கும் உரிய அறிவுரைகளை வழங்க அந்தந்த மாவட்ட கல்வி அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்"
இவ்வாறு தொடக்கக்கல்வி இயக்குனரகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.