மணிப்பூரில் 13 நாட்களுக்கு பிறகு பள்ளி, கல்லூரிகள் நாளை திறப்பு!
மணிப்பூரின் 6 மாவட்டங்களில் கடந்த 2 வாரங்களாக மூடப்பட்டிருந்த பள்ளி, கல்லூரிகள் நாளை மீண்டும் திறக்கப்படுகிறது.
மணிப்பூரின் இம்பால் மற்றும் ஜிரிபாம் ஆகிய பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரிகள் 13 நாள்களுக்குப் பிறகு நாளை முதல் மீண்டும் தொடங்கும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. மணிப்பூரில் மைதேயி, குக்கி இனத்தவரிடையே கடந்தாண்டு மே மாதம் மோதல் ஏற்பட்டு, வன்முறையாக மாறியது. ஓராண்டுக்கு மேலாகியும் இரு தரப்பினரிடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது.
இந்த வன்முறையால் இதுவரை 70 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் இடம் பெயர்ந்துள்ளனர். 250க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இச்சூழலில் கடந்த சில நாட்களாகவே ஜிரிபாம் பகுதியில் குக்கி கிளர்ச்சியாளர்கள் வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அங்கு பதட்டமான சூழல் நிலவி வருகிறது.
இதனிடையே வடகிழக்குப் பகுதியில் நவம்பர் 11ஆம் தேதி இருவர் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டனர். மேலும் மூன்று பெண்கள் மற்றும் 3 குழந்தைகளைக் கிளர்ச்சியாளர்கள் கடத்திச் சென்றனர். அவர்களை மீட்கக் கோரி மணிப்பூரின் ஜிரிபாம் மாவட்டத்தில் நவம்பர் 16 கலவரம் மூண்டது. இந்தக் கலவரத்தால் பலர் பாதிக்கப்பட்டனர்.
சட்டம்-ஒழுங்கு சீர்கெடுவதைத் தடுக்கும் வகையில் மணிப்பூரின் பதற்றமான பகுதிகளில் நவம்பர் 16ஆம் தேதி முதல் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டன. இணையச் சேவை துண்டிக்கப்பட்டது. இந்த இணைய சேவை முடக்கம் நாளை மாலை 5.15 மணி வரை அமலில் இருக்கும்.
இந்த நிலையில் நிலைமை சற்று மீண்டுள்ள நிலையில், மீண்டும் கல்வி நிறுவனங்கள் செயல்படுவதற்கான அறிக்கையைப் பள்ளிக்கல்வி இயக்குநரகம் வெளியிட்டுள்ளது. அதன்படி அரசு, அரசு உதவிபெறும், தனியார் மற்றும் மத்தியப் பள்ளிகள் அனைத்தும் நவம்பர் 29 முதல் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, இம்பால் மேற்கு, இம்பால் கிழக்கு, தௌபால், பிஷ்னுபூர், கக்சிங் மற்றும் ஜிரிபாம் ஆகிய 6 மாவட்டங்களில் அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டிருந்தன.