செங்கல்பட்டு மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகள் நாளை முதல் வழக்கம் போல் இயங்கும் - மாவட்ட ஆட்சியர் ராகுல் நாத்
செங்கல்பட்டு மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகள் நாளை (டிச.11) முதல் வழக்கம் போல் இயங்கும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
மிக்ஜாம் புயல் காரணமாக தமிழ்நாட்டில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகனமழை கொட்டித் தீர்த்தது. இதனால், சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். பல்வேறு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ளதால் முகாம்களில் மக்கள் தங்கவைக்கப்பட்டனர்.
தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் மழைநீரை வெளியேற்றும் பணி நடைபெற்று வருகிறது. அரசு அதிகாரிகள், மாநகராட்சி ஊழியர்கள், தூய்மைப் பணியாளர்கள் என பலரும் இந்த பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், பல இடங்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றன.
இதையும் படியுங்கள்: இரண்டாம் நிலை காவலர் பணியிட எழுத்து தேர்வு இன்று நிறைவு!
புயல் காரணமாக பெய்த கனமழையால் பள்ளி, கல்லூரிகளும் பாதிக்கப்பட்டன. இதன் காரணமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் 6 தாலுக்காவில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு டிச. 4-ம் தேதி முதல் தொடர்ந்து 7 நாட்களுக்கு தமிழ்நாடு அரசு விடுமுறை அறிவித்தது.
இந்த நிலையில் நாளை (டிச.11) முதல் செங்கல்பட்டு மாவட்டத்தில் பள்ளி,கல்லூரிகள் வழக்கம்போல் இயங்கும் என செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல் நாத் தெரிவித்துள்ளார்.