#SchoolLeave | தொடரும் கனமழை... கன்னியாகுமரியில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை!
கனமழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று (அக். 25) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலை கொண்டிருந்த “டானா புயல்”, வடக்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து, மத்திய மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில், நேற்று இரவு 11.30 மணியளவில் தீவிர புயலாக வலுப்பெற்றது. இது மேலும் வடக்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து வடக்கு ஒடிசா மற்றும் மேற்கு வங்க கடற்கரை பகுதிகளில், பூரி - சாகர் தீவுகளுக்கு இடையே, பிதர்கனிகா மற்றும் தாமரா அருகே மிகத்தீவிர புயலாக, இன்று காலை கரையைக் கடந்தது.
அதேபோல், தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று (அக். 25) தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, பெரம்பலூர், அரியலூர், நாமக்கல், கரூர் மாவட்டங்களில் கனமழைக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கன்னியாகுமரியில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக பேச்சிப்பாறை, கோதையார், மோதிரமலை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால், மலைப்பகுதியில் பழங்குடி மக்கள் வசிக்கும் கொலோஞ்சிமடம் பகுதியில் திடீரென காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இன்றும் கனமழைக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒரு நாள் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் அழகு மீனா உத்தரவு பிறப்பித்தார்.