#SchoolLeave | தொடர் கனமழை… எந்தெந்த மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை?
கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதன் காரணமாக நெல்லையில் உள்ள பள்ளிகளுக்கும், மதுரையில் இரண்டு வருவாய் வட்டங்களுக்கு உட்பட்ட பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலைகொண்டிருந்த தீவிர புயல் (டானா), வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, நேற்று அதிகாலை வடக்கு ஒரிசா கடற்கரையில், பிதர்கனிகா மற்றும் தாமரா (ஒரிசா) பகுதிகளுக்கு அருகே தீவிர புயலாகவே கரையை கடந்தது. தெற்கு கேரள கடற்கரையை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு கிழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் இன்று ஒருசில இடங்களிலும், புதுச்சேரிமற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய வேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
குறிப்பாக தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை முதல் வரும் 31ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்தே மதுரை, தேனி, நெல்லை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இன்றும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதன் காரணமாக நெல்லை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு இன்று (அக்.26) விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார். சிறப்பு வகுப்புகளை ரத்து செய்யவும் அவர் அறிவுறுத்தியுள்ளார். அதேபோல், மதுரை மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு மற்றும் மதுரை வடக்கு ஆகிய இரண்டு வருவாய் வட்டங்களுக்கு உட்பட்ட பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சித் தலைவர் சங்கீதா உத்தரவிட்டுள்ளார்.