கொட்டும் மழையில் நனைந்தபடி பள்ளி மாணவிகள் போராட்டம்!
கனமழை பெய்யும் போதும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கவில்லை என, மழையில் நனைந்தபடியே பள்ளி மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வட கிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. கடலோர மாவட்டங்களில் இன்று (நவ.30) கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் நேற்று அறிவித்திருந்தது. அதுபோலவே, காலைமுதல் கனமழை வெளுத்து வாங்கியது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் பல மாவட்டங்களுக்கு மழையின் காரணமாக இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை இல்லை என மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் அறிவிப்பு வெளியிட்டார். இதனால், மாணவர்கள் மழையில் நனைந்தபடியே பள்ளிக்கு சென்றனர். பல பள்ளிகளில் உள்ளே நுழையும் போதே மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. சிலர் மழையில் நனைந்து குளிர் தாங்க முடியாமல் உடல் பாதிக்கும் நிலையில் பள்ளிக்கு வந்தனர்.
இந்நிலையில், திருக்கழுக்குன்றம் பெண்கள் அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கும்
மாணவிகள் ஒன்று சேர்ந்து பள்ளிக்கு முன்பாக செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல் நத்தை கண்டித்து விடுமுறை அறிவிக்க கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் . இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது . செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் மெத்தனமாக செயல்படுவதாகவும், அரசு அதிகாரிகளை கண்டித்து விரைவில் போராட்டம் அறிவிக்கப்படும் எனவும் பெற்றோர்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.