#Croatia | குரோஷியாவில் பள்ளியில் கத்திக்குத்து - சிறுமி உயிரிழப்பு!
குரோஷியாவில் பள்ளியில் நடந்த கத்திக்குத்து சம்பவத்தில் 7 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான குரோஷியாவின் தலைநகர் சாக்ரெப் அருகே பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். பள்ளி நேற்று (டிச.20) வழக்கம்போல் செயல்பட்டு கொண்டிருந்தது. மாணவர்கள் தங்கள் வேலைகளை செய்துக்கொண்டிருந்தனர். இந்த நிலையில், இந்த பள்ளியில் நேற்று (டிச.20) திடீரென கத்திக்குத்து சம்பவம் நடைபெற்றது.
பள்ளி வளாகத்திற்குள் புகுந்த இளைஞர் ஒருவர் ஆசிரியர் மற்றும் மாணவர்கள் மீது சரமாரியாக கத்திக்குத்து தாக்குதல் நடத்தினார். இதனைப் பார்த்த மாணவர்களும் ஆசிரியர்களும் அலறியடித்து ஓடினர். உடனடியாக இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன்பேரில் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், தாக்குதலில் ஈடுபட்ட இளைஞரை மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.
மேலும், போலீசார் இதில் காயமடைந்த ஆசிரியர் மற்றும் 5 மாணவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்க அவர்களுக்கு தீவிர சிசிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த தாக்குதலில் 7 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட இளைஞரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த பள்ளி தற்போது போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.