நாற்காலியுடன் தரதரவென இழுத்து செல்லப்படும் பள்ளி முதல்வர்! - வைரலாகும் வீடியோ!
உத்தரபிரதேசத்தில் பள்ளியின் முதல்வரை நாற்காலியுடன் உட்கார்ந்திருந்தபோதே தரதரவென சக ஆசிரியைகள், பள்ளி நிர்வாகத்தினர் இழுத்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் பிரக்யராஜ் பகுதியில் அமைந்துள்ளது பிஷப் ஜான்சன் மகளிர் பள்ளி. இந்த பள்ளியில் கடந்த பிப்ரவரி மாதம் 11ஆம் தேதி உத்தரபிரதேச மாநில அரசு நடத்திய ஆர்.ஓ. உதவியாளர் பணிக்கு தேர்வு நடைபெற்றது. ஆனால், தேர்வு தொடங்கும் முன்னரே வினாத்தாள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த விவகாரம் தொடர்பாக அந்த மாநில சிறப்பு போலீஸ் பிரிவு விசாரணை நடத்தியதில், அந்த பள்ளியில் தேர்வு கண்காணிப்பாளராக இருந்த வினீத் யஸ்வந்த் உள்ளிட்ட சிலரை கைது செய்தனர். இந்த விவகாரத்தில் அந்த பள்ளியின் முதல்வராக பதவி வகித்த பரூல் சாலமன் என்ற பெண்ணுக்கும் தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த சூழலில், பள்ளி முதல்வர் பரூல் சாலமனுக்கு எதிராக பள்ளி நிர்வாகத்தில் குற்றச்சாட்டுகள் எழுந்தது. மேலும், பள்ளி நிர்வாகம் சார்பில் பிஷப் டான் பள்ளியின் முதல்வராக பரூல் சாலமன் பதவி வகித்தபோது ரூபாய் 2.40 கோடி வரை அவர் முறைகேடு செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இதனால் அவருக்கு பதில் புதிதாக ஒருவரை பள்ளியின் முதல்வராக நியமித்துள்ளனர்.
यह प्रयागराज के बिशप जॉनसन गर्ल्स स्कूल का दृश्य है। यहां पर प्रिंसिपल की अदला-बदली कुछ इसी तरह होती है।
पहले दरवाजा तोड़कर प्रिंसिपल के कमरे में घुसा जाता है, प्रिंसिपल की कुर्सी छीनी जाती है, धक्का मार कर बाहर किया जाता है और फिर नए प्रिंसिपल को कुर्सी पर बैठाया जाता है। pic.twitter.com/M0aEfMlkp0
— Samiratmaj Mishra (@SamiratmajM) July 5, 2024
இந்த சூழலில், பள்ளியின் புதிய முதல்வர் பதவியேற்க நேற்று வந்த சூழலில் பரூல் சாலமன் தான் பள்ளி முதல்வர் பதவியை விட்டுத்தர மாட்டேன் என்று கூறியதாக கூறப்படுகிறது. மேலும், அவர் பள்ளி முதல்வர் நாற்காலியில் இருந்து எழுந்து செல்ல மறுப்பு தெரிவித்தார். அவருடன் பள்ளியின் சேர்மன், மற்ற ஆசிரியர்கள், பள்ளி நிர்வாகிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தன்னுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்களை தனது செல்போனில் பரூல் சாலமன் படம் பிடித்தார். அப்போது, அவரது செல்போனை வழக்கறிஞர் ஒருவரும், பள்ளி நிர்வாகத்தினர் சிலரும் பறிக்க முயற்சித்தனர்.
பின்னர், அவர் அமர்ந்திருந்த நாற்காலியுடன் அவரை தரதரவென இழுத்துச் அந்த அறையின் வாசல் வரை சென்றனர். பின்னர், பரூல் சாலமன் அந்த நாற்காலியில் இருந்து எழுந்தார். இதையடுத்து, அந்த நாற்காலியில் புதியதாக நியமிக்கப்பட்ட பள்ளி முதல்வரை அந்த பள்ளியின் சேர்மன் அமரச் சொன்னார்.
இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.