Scholar To Statesman - மன்மோகன் சிங்கும் இந்திய ஜனநாயகத்தின் வளர்ச்சியும்!
மறைந்த மன்மோகன் சிங் இந்திய நாட்டிற்கும் அதன் ஜனநாயக வளர்ச்சிக்கும் ஆற்றிய பங்களிப்பை குறித்து விவரிக்கிறது இந்த தொகுப்பு.
”நேரம் வந்துவிட்டது. இனி உலகில் எந்த சக்தியாலும் நம்மை தடுத்து நிறுத்த முடியாது. இந்தியா மிகப்பெரிய பொருளாதார சக்தியாக இந்தியா உருவாகப் போகிறது. நாம் வெற்றி பெறுவோம் முழு உலகமும் இதை உரக்க கேட்கட்டும்" இப்படி மொத்த அவையும் அமைதியாக இருக்க 1991 ஆம் ஆண்டு ஜூலை 24ஆம் தேதி நிதி அமைச்சராக தன்னுடைய முதல் உரையாற்றினார் மன்மோகன் சிங்.
இந்திய ஜனநாயகத்தை வடிவமைப்பதிலும் முன்னேற்றுவதிலும் இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் பங்களிப்பு இன்றியமையாத ஒன்று. 2004 முதல் 2014 வரையிலான இந்திய வரலாற்றில் மிக முக்கியமான ஒரு காலகட்டம். அரசியல், பொருளாதாரம் மற்றும் சமூக மாற்றங்களைக் கண்ட ஒரு முக்கியமான அக்காலகட்டத்தில் அமைதியான சுபாவம் கொண்ட ஒரு பொருளாதார நிபுணராக அறியப்பட்ட மன்மோகன் சிங்தான் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடுகளில் ஒன்றான இந்தியாவில் அரசியல், பொருளாதார சீர்திருத்தங்கள் மற்றும் நிர்வாகத்தின் உள்ள சவால்களின் சிக்கல்களை தன்னுடய தலைமையின் கீழ் வழிநடத்தினார்.
அரசியல் ஜனநாயகம் :
ஒரு பிரதமராக, தன்னுடைய ஆட்சிக் காலம் முழுவதும் மன்மோகன் சிங் அரசியல் ஜனநாயக விழுமியங்களை உறுதியாக கடைபிடித்தார். இந்தியாவின் பாராளுமன்ற ஜனநாயகத்தின் கட்டமைப்பிற்குள் அவர் பணியாற்றினார் . விவாதங்கள், கலந்தாலோசனைகளை நடத்துதல் மற்றும் ஒருமித்த கருத்தை உருவாக்குவதன் மூலம் முடிவுகள் எடுத்தல் போன்றவற்றை ஜனநாயக வழிநின்று உறுதி செய்தார். மன்மோகன் சிங்கின் நிர்வாகம் அதிகாரப் பிரிவினையை மதித்து சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துவதை உறுதி செய்தது.
பல்வேறு அரசியல் கட்சிகளின் நலன்களை உள்ளடக்கிய ஒரு கூட்டணி அரசாங்கத்தை மன்மோகன் சிங் சிறப்பாக வழிநடத்தினார். கூட்டாட்சி தத்துவத்தை பேசும் இந்தியா போன்ற ஜனநாயக நாட்டில் கூட்டணி அரசாங்கம் என்பது முக்கியமான ஒன்று. கூட்டணி அரசாங்கத்தினை வழிநடத்திய அவரது பங்கின் விளைவாக ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு 10ஆண்டுகள் நீடித்தது.
பொருளாதார ஜனநாயகம்:
மன்மோகன் சிங்கின் பொருளாதாரக் கொள்கைகள், குறிப்பாக 1990 களில் அவர் நிதி அமைச்சராக இருந்த காலத்தில் வகுக்கப்பட்ட பொருளாதார கொள்கைகள் இந்தியாவின் வலுவான வளர்ச்சிக்கு அடித்தளம் அமைத்தன. இதனைத் தொடர்ந்து அவர் பிரதமராகவும் பொருளாதார சீர்திருத்தங்களில் தொடர்ந்து கவனம் செலுத்தியதால், 2000 ஆண்டுகளின் பின்னர் உலகின் மிக வேகமாக வளரும் பொருளாதார நாடுகளில் ஒன்றாக இந்தியா உருவெடுத்தது
இதேபோல தகவல் தொழில்நுட்பம், விவசாயம் மற்றும் உற்பத்தி போன்ற முக்கிய துறைகளில் வாய்ப்புகளை விரிவுபடுத்தியதன் மூலம் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை அவர் ஊக்குவித்தார். இந்தத் துறைகளின் வளர்ச்சி மில்லியன் கணக்கானவர்களை வறுமையிலிருந்து உயர்த்தவும் நடுத்தர வர்க்கத்தை விரிவுபடுத்தவும் உதவியது. இது அரசியல் பங்கேற்பில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தியது.
பத்திரிகை ஜனநாயகம் :
எல்லாக் காலங்களிலும் அவர் ஊடகங்களை சந்தித்தே வந்தார். பத்திரிகையாளர் சந்திப்பு மற்றும் அரசின் மூலம் மக்களிடையே பேசினார். அவர் மீது எதிர்க்கட்சிகளும் ஊடகங்களும் அவர் ஒரு அமைதியான பிரதமர் என குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். அதற்கு அவர் பதிலடியாக இப்படிச் சொன்னார்..
"என்னுடைய வேலைகள் குறித்து நான் பெருமையாக பேச வேண்டிய அவசியமில்லை. ஆனால், என்னுடைய பணிகாலத்தில் நான் ஊடகங்களில் பேச ஒருபோதும் பயந்தது இல்லை. நான் தொடர்ச்சியாக ஊடகவியலாளர்களை சந்தித்து வந்தேன். வெளிநாட்டுக்கு அரசுமுறை பயணம் மேற்கொள்ளும்போது, நான் விமானத்திற்குள் செய்தியாளர்களை சந்திப்பேன். அல்லது, இந்தியாவுக்கு வந்த பிறகு டெல்லியில் செய்தியாளர்களை சந்திப்பேன்," என்று கூறினார்.
இந்திய ஜனநாயகத்தை சர்வதேசமயமாக்கியதில் அவரின் பங்கு :
இந்தியாவின் சர்வதேச பிம்பத்தை மறுவடிவமைப்பதில் மன்மோகன் சிங் ஒரு முக்கிய பங்காற்றினார். அமெரிக்காவுடனான ஒத்துழைப்பையும், ஆசிய அண்டை நாடுகளுடன் உறவுகளை வலுப்படுத்துவதையும், பாகிஸ்தானுடன் மோதலில்லா நிலைப்பாட்டை பேணுவதையும் அவரது வெளியுறவுக் கொள்கை மூலம் சிறப்பாக வழிநடத்தினார். இந்தியாவின் ஜனநாயகக் கொள்கைகளை உலக அரங்கில் வெளிப்படுத்தினார் .
மன்மோகன் சிங் தலைமையின் மிக முக்கியமான ஒன்றாக கருதப்பட்டது 123 என்று அழைக்கப்பட்ட இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தமாகும். இது இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் ஒரு மைல்கல் மட்டுமல்ல உலக அரங்கில் ஒரு ஜனநாயக நாடாக இந்தியாவின் வளர்ந்து வரும் செல்வாக்கையும் நிரூபித்தது. இந்த ஒப்பந்தத்திற்கு உள்நாட்டில் இடதுசாரி அமைப்புகளால் விமர்சனத்திற்கும் உள்ளானது .
ஒரு பொருளாதார நிபுணராக இருந்து இந்திய பிரதமராக பதவி வகித்த அவர் சமகால இந்திய ஜனநாயகத்தின் வளர்ச்சியில் பெரும் பங்காற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. 2014 ஜனவரி 1ல் அவரின் பதவிக் காலத்தின் கடைசியில் செய்தியாளர்களை சந்தித்த மன்மோகன் சிங் "வரலாறு என்னிடம் கனிவாக இருக்கும் என பேட்டியளித்தார். அத்தனை காலம் தன் மீது வைத்த விமர்சனங்களுக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அந்த பேட்டி அமைந்தது.
நான் பலவீனமான பிரதமராக இருந்தேன் என நான் நம்பவில்லை, சமகால ஊடகங்களை விட நாடாளுமன்றத்தில் இருக்கும் எதிர்க்கட்சிகளை விட வரலாறு என்னிடம் கனிவாக இருக்கும் என நான் நேர்மையாக நம்புகிறேன். சூழ்நிலைகளுக்கு ஏற்ப என்னால் என்ன செய்ய முடியுமோ அதை நான் செய்திருக்கிறேன். நான் என்ன செய்தேன் அல்லது நான் என்ன செய்யவில்லை என்பது குறித்து வரலாறு தீர்ப்பளிக்கும்
- ச.அகமது , நியூஸ் 7 தமிழ்