அமரன் படத்தில் மொபைல் எண் இடம்பெற்ற காட்சி நீக்கம் !
அமரன் திரைப்படத்தில் மாணவரின் மொபைல் எண் இடம்பெற்றிருந்த காட்சி நீக்கப்பட்டுவிட்டதாக ராஜ்கமல் பில்ம்ஸ் தகவல் தெரிவித்துள்ளது.
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தீபாவளிக்கு வெளி வந்த திரைப்படம் அமரன். இந்த படத்தில், சாய்பல்லவியின் மொபைல் எண் தன்னுடயைது என கூறி சென்னை அழ்வார் திருநகரை சேர்ந்த வாகீசன் என்பவர் வழக்கு தொடர்ந்தார் . அந்த மனுவில் தொலைபேசி எண்ணிற்கு ஆயிரக்கணக்கான அழைப்புகள் வந்ததால், தன்னால் நிம்மதியாக தூங்க முடியவில்லை, படிக்க முடியவில்லை என்றும் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானதாக தெரிவித்துள்ளார் .
இதனால் 1 கோடியே 10 லட்சம் ரூபாயை இழப்பீடாக வழங்க ராஜ்கமல் இன்டர்நேஷனல் நிறுவனத்திற்கும், ராஜ்குமார் பெரியசாமிக்கும் உத்தரவிட வேண்டுமென கோரிக்கை வைத்திருந்தார்.இந்த வழக்கு நீதிபதி சவுந்தர் முன் விசாரணைக்கு வந்த போது, ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன், மனுதாரரின் மொபைல் எண் இடம் பெற்றிருந்த காட்சி நீக்கப்பட்டு, தணிக்கை குழுவிடம் புதிய தணிக்கை சான்று பெறப்பட்டுள்ளதாக விளக்கமளித்தார்.
இதையடுத்து நீதிபதி ரிட் வழக்கில் இழப்பீடு வழங்கும்படி உத்தரவிட முடியாது என கூறியதோடு மனுவிற்கு பதிலளிக்கும்படி உத்தரவிட்டு விசாரணையை டிசம்பர் 20ம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார் .