#SAvsAUS : ஆஸ்திரேலிய அணிக்கு 213 ரன்கள் இலக்காக நிர்ணயித்த தென்னாப்பிரிக்கா!
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு 213 ரன்களை இலக்காக தென்னாப்பிரிக்க அணி நிர்ணயித்துள்ளது. அதிகபட்சமாக டேவிட் மில்லர் 101 ரன்கள் எடுத்திருந்தார்.
2023 உலகக்கோப்பை தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. லீக் போட்டிகள் நிறைவுற்ற நிலையில் அரையிறுதியின் நாக் அவுட் போட்டியில் முதல் இடத்தில் இருக்கும் இந்திய அணி, புள்ளிப்பட்டியலில் நான்காம் இடத்தில் உள்ள நியூசிலாந்து அணியை எதிர்கொண்டது. இதில், இந்திய 70 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிப்பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது
இதனை தொடர்ந்து அரையிறுதிப் போட்டியின் இரண்டாம் போட்டி இன்று மதியம் கொல்கத்தாவில் தொடங்கியது. இதில் ஆஸ்திரேலிய அணியும், தென்னாப்பிரிக்க அணியும் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக டி காக்கும், பவுமாவும் களம் இறங்கினர். இதில் அணியின் கேப்டனான பவுமா 4 பந்துகளை சந்தித்த நிலையில் டக் அவுட் ஆகி அதிர்ச்சி கொடுத்தார். இதனை அடுத்து டி காக்கும் 14 பந்துகளை சந்தித்த நிலையில் 3 ரன்கள் மட்டுமே சேர்த்த நிலையில் பெவிலியன் திரும்பினார்.
இதனை அடுத்து களம் இறங்கிய வான்டர் டசன், மார்கம் ஆகிய இருவரும் முறையே 6, 10 ரன்கள் எடுத்த நிலையில் நடையை கட்டினர். இதனை அடுத்து ஹென்ரிச் க்ளாசன் மற்றும் டேவிட் மில்லர் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆடத்தொடங்கினர். தென்னாப்பிரிக்க அணி 14 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 44 ரன்கள் எடுத்திருந்த நிலையில், மழை குறுக்கிடவே போட்டி இடையில் நிறுத்தப்பட்டது. பின்னர் மழை நின்றவுடன் சரியாக 3.55 pm மணியளவில் மீண்டும் போட்டி தொடங்கியது.
பின்னர் 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டினை இழந்து 67 ரன்கள் சேர்த்தது. 30 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டினை இழந்து 111 ரன்கள் மட்டுமே சேர்த்தது தென்னாப்பிரிக்க அணி. போட்டியின் 31வது ஓவரில் சிறப்பாக ரன்கள் சேர்த்து வந்த ஹெட் மற்றும் அதன் பின்னர் களமிறங்கிய யான்சன் ஆகியோரது விக்கெட்டினை அடுத்தடுத்து கைப்பற்றி அசத்தினார். 40 ஓவர்களில் தென்னாப்பிரிக்கா அணி 6 விக்கெட்டுகளை இழந்து 156 ரன்கள் சேர்த்தது. மில்லருக்கு நன்கு ஒத்துழைப்பு கொடுத்து வந்த கோட்ஸீ தனது விக்கெட்டினை 19 ரன்கள் சேர்த்த நிலையில் வெளியேறினார். இவர் 39 பந்தில் 19 ரன்கள் சேர்த்து கம்மின்ஸ் பந்தில் வெளியேறினார். பின்னர் கேசவ் மகராஜ் தனது விக்கெட்டினை ஸ்டார்க் பந்தில் இழந்து வெளியேறினார்.