#SAvsAUS: போராடி வென்ற ஆஸ்திரேலியா.. இறுதிப்போட்டியில் இந்தியாவுடன் பலப்பரீட்சை!
உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான போட்டியில் 215 ரன்கள் எடுத்து ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் இறுதிப் போட்டியில் இந்திய அணியுடன் ஆஸ்திரேலிய அணி கலமிறங்குவது உறுதியாகியுள்ளது.
2023 உலகக்கோப்பை தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. லீக் போட்டிகள் நிறைவுற்ற நிலையில் அரையிறுதியின் நாக் அவுட் போட்டியில் முதல் இடத்தில் இருக்கும் இந்திய அணி, புள்ளிப்பட்டியலில் நான்காம் இடத்தில் உள்ள நியூசிலாந்து அணியை எதிர்கொண்டது. இதில், இந்திய 70 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிப்பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
இதனை தொடர்ந்து அரையிறுதிப் போட்டியின் இரண்டாம் போட்டி இன்று மதியம் கொல்கத்தாவில் தொடங்கியது. இதில் ஆஸ்திரேலிய அணியும், தென்னாப்பிரிக்க அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக டி காக்கும், பவுமாவும் களம் இறங்கினர். இதில் அணியின் கேப்டனான பவுமா 4 பந்துகளை சந்தித்த நிலையில் டக் அவுட் ஆகி அதிர்ச்சி கொடுத்தார்.
இறுதியில் தென்னாப்பிரிக்கா அணி 49.4 ஓவர்களில் 10 விக்கெட்டுகளை இழந்து 212 ரன்கள் சேர்த்தது. தென்னாப்பிரிக்க அணி ஆஸ்திரேலிய அணிக்கு 213 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது. இதனைத்தொடர்ந்து ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்ய ஆரம்பித்தது. ஆட்டத்தின் 7வது ஓவரின் முதல் பந்தில் வார்னர் தனது விக்கெட்டினை மார்க்ரம் பந்தில் இழந்து வெளியேறினார். இவர் 18 பந்தில் 29 ரன்கள் சேர்த்து அவுட் ஆனார்.
8 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலியா அணி 2 விக்கெட்டினை இழந்து 61 ரன்கள் சேர்த்தது. அரைசதம் கடந்து அதிரடியாக விளையாடி வந்த டிராவிஸ் ஹெட் தனது விக்கெட்டினை 48 பந்தில் 62 ரன்கள் சேர்த்த நிலையில் மஹராஜ் பந்தில் வெளியேறினார். 31 பந்தில் 18 ரன்கள் சேர்த்த நிலையில் லபுசேன் தனது விக்கெட்டினை ஷம்ஷி பந்தில் இழந்து வெளியேறினார்.
இங்லிஷ் தனது விக்கெட்டினை 40வது ஓவரை வீசிய கோட்ஸீயிடம் இழந்து வெளியேறினார். இவர் 28 ரன்கள் சேர்த்தார். ஆஸி. அணி 43 ஓவர்களில் 203 ரன்கள் எடுத்திருந்தது. அடுத்த 2 ஓவர்களுக்கு 3 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. இறுதியாக 47.2 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி 215 ரன்கள் எடுத்து 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்க அணியை வெற்றி கொண்டது. அதிகபடியாக ட்ராவிஸ் ஹெட் 62 ரன்கள் எடுத்திருந்தார்.
1987, 1999, 2003, 2007, 2015 ஆகிய வருடங்களில் சாம்பியன் பட்டமும், 1975, 1996 ஆகிய வருடங்களில் இரண்டாம் இடமும் பிடித்துள்ளது ஆஸ்திரேலியா