சாத்தூர் பட்டாசு வெடி விபத்து - உயிரிழப்பு எண்ணிக்கை 4 ஆக அதிகரிப்பு!
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள விஜயகரிசல்குளத்தில், பொண்ணுப்பாண்டி என்பவரது வீட்டில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்தபோது வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் இரண்டு பெண் தொழிலாளர்கள் உட்பட மூன்று பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், ஒருவர் பலத்த காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த விபத்து குறித்து விசாரணை நடத்திய வெம்பக்கோட்டை போலீசார், வீட்டின் உரிமையாளர் பொண்ணுப்பாண்டி மீது வழக்குப்பதிவு செய்தனர். சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்தது, உயிரிழப்புக்குக் காரணமானது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில் வெடி விபத்தில் காயமடைந்து சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மாரியம்மாள் (44), என்ற தொழிலாளி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது.