சத்தியமங்கலம் : தண்ணீர் தேடிச்சென்ற பெண் யானை மலை ஏறும்போது தவறி விழுந்து உயிரிழப்பு!
சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் கடம்பூர் மலைப்பகுதியில் ஏறும் போது தவறி விழுந்து படுகாயமடைந்த யானை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பத்தில் யானை, புலி, சிறுத்தை, கரடி என ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. இந்த பகுதிக்கு அருகில் கடம்பூர் மலைப்பகுதி, குரும்பூர் மலை கிராமத்தில் தங்கவேல் என்பவருக்கு சொந்தமான விவசாய தோட்டத்தை ஒட்டி நேற்று (ஏப். 8) காலை 6 மணி அளவில் யானை ஒன்று பிளிரும் சத்தம் கேட்டுள்ளது. சத்தம் கேட்டு அங்கு சென்று விவசாயி பார்த்தபோது யானை ஒன்று கீழே விழுந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்துள்ளது.
இதுகுறித்து உடனே வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த வனத்துறையினர் யானையை பார்வையிட்டனர். அப்போது யானையின் முதுகில் பலத்த காயம் இருந்துள்ளது தெரியவந்தது. இதனைக்கண்ட வனத்துறையினர் வனக் கால்நடை மருத்துவர்கள் மூலம் சிகிச்சை அளிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால், அந்த யானை சிகிச்சை பலனின்றி நேற்று இரவு 8 மணி அளவில் பரிதாபமாக உயிரிழந்தது.
இந்த சம்பவம் குறித்து வனத்துறையினர் கூறுகையில், உயிரிழந்த யானை சுமார் 40 வயது மதிக்கத்தக்க பெண் யானை எனவும், தண்ணீர் தேடி கிராமப் பகுதிக்குள் வந்து விட்டு திரும்பி வனத்திற்குள் செல்லும்போது மலை ஏற்றத்தில் தவறி விழுந்து முதுகில் படுகாயம் அடைந்துள்ளது எனவும், வனக் கால்நடை மருத்துவர்கள் மூலம் சிகிச்சை அளித்தும், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது எனவும் தெரிவித்தனர்.